விக்கிரவாண்டி தேர்தல்..!! ஒரு ஓட்டுக்கு ரூ.6,000..!! திமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பாமக வேட்பாளர்..!!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினர் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 கொடுத்துள்ளதாக பாமக வேட்பாளர் சி.அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் துவங்கியது. 24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தகுதியான மனுக்களில் யாரும் வாபஸ் பெறாததால் 29 வேட்பாளர்களுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 26ஆம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, “தமிழக முதல்வரின் மக்கள் நலத் திட்டங்களால் இத்தொகுதியில் திமுக மிகப்பெரிய வெற்றிபெறும்' என்றார். இதனைத் பின்னர், பாமக வேட்பாளர் சி.அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இத்தொகுதியில் உள்ள எங்களுக்குள் கட்சி வேறுபாடுகள் இருந்தாலும் சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், வெளியூர்களில் இருந்து இங்கு வந்து திமுக நிர்வாகிகள் வீட்டில் தங்கியுள்ள திமுகவினரால் இங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட விராட்டிகுப்பம் கே.வி.ஆர் நகரில் திமுகவினர் வாக்காளர்களுக்கு தலா ரூ.6,000 அளித்துள்ளனர். இதேபோல தொகுதி முழுவதும் ரொக்கப் பணம், பரிசுப் பொருட்களைக் கொடுத்துள்ளனர். வி. சாத்தனூரில் பரிசுப் பொருட்களையும், ஆசாரங்குப்பத்தில் வேட்டி சேலையும் கொடுத்தபோது அதை பாஜகவினரும், பாமகவினரும் பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இருப்பினும், தேர்தல் ஆணையம் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் பாமக அமோக வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.