விஜய்யின் கொள்கை ”கருவாட்டு சாம்பார்"..!! ரெண்டு பேருக்கு ஒத்துப்போகாது..!! சீமான் கடும் விமர்சனம்..!!
நடிகர் விஜய் கட்சி தொடங்கி அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்த போதே நாம் தமிழர் - தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி சேர வாய்ப்பு உள்ளதா என்று சீமானிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அவர் முழுவதுமாக மறுத்தும் பேசாமல், ஏற்றும் பேசாமல் பதிலளித்து வந்தார். நேற்று விஜய் தனது கட்சியின் கொள்கையை வெளியிட்ட பின்னர் சீமான் நேரெதிர் கொள்கையுடன் விஜய் வந்துள்ளதாக கூறியுள்ளார்.
விஜய் கொள்கையை விளக்கி பேசுகையில், “கொள்கை கோட்பாட்டு அளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் நாம் பிரித்து பார்க்கப் போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து” எனக் கூறியிருந்தார். திராவிடத்தை முழுவதுமாக நிராகரித்து பேசிவரும் சீமான், தற்போது விஜய்யின் கொள்கையை கருவாட்டு சாம்பார் என்று விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய கொள்கையும் விஜய்யின் கொள்கையும் ஒத்துப் போகவில்லை. திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் கூறியிருப்பது எங்கள் கொள்கைகளுக்கு எதிரானது. நேர்மாறானது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என விஜய் கூறினால் அது தவறு. என்டிஆர் தெலுங்கு தேசம் என உருவாக்கிய போது எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால், தமிழ் தேசம் என கூறப்பட்ட நிலையில், அது பாசிசம் என அர்த்தம் கற்பிக்கப்பட்டது.
பெரியாரை ஏற்கும் போது திராவிடத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். இதையேதான் திமுகவும் செய்கிறது. ஆனால், நாங்கள் திராவிட மாடலை திருட்டு மாடல் என சொல்கிறோம். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பது நீண்ட கால கோரிக்கை. இதை நான் ஏற்கனவே பேசியவன். என் பயணம் என் கால்களை நம்பித்தான். யார் காலையும் நம்பி இல்லை. திராவிடம் என்பது சமஸ்கிருதம். மாடல் என்பது ஆங்கிலம். இது என்ன மாடல்.
தமிழராட்சி தமிழ்நாடு என்று பேச முடியவில்லை. நான் திருப்பத்தூர் போக வேண்டுமென்றால் திருப்பூர் நோக்கி பயணிக்க முடியாது. என் பாதை என் இலக்கு என் பயணம் என்பது எனக்குதெரியும். என் கனவு எனக்கானதல்ல. எனது முன்னோர்கள் வகுத்த கனவை என் கனவாக கொண்டு செயல்பட்டுள்ளேன். நான் தனித்துப் போட்டியிடுவேன் என சொல்லிவிட்டேன். என் பயணம் உறுதியானது. விஜய் வெற்றி பெறுவது நிலைப்பது என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Read More : ”பேய்கள் இருப்பது உண்மையென்றால் இதையெல்லாம் ஏன் செய்யல”..? அறிவியல் என்ன சொல்கிறது..?