விஜயகாந்தின் உடல்நிலை..!! தேமுதிகவில் அதிரடியாக மாறும் பொறுப்புகள்..!! நடப்பது என்ன..?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேசமயம், தேமுதிகவுக்குள் விரைவில் ஒருசில மாற்றங்கள் ஏற்படலாம் என்கிறார்கள். இதுகுறித்த தகவல்களை தற்போது பார்க்கலாம்.
தேமுதிக தலைவராக பிரேமலதா பொறுப்பேற்பார் அல்லது செயல் தலைவராக பொறுப்பேற்பார் அல்லது பொதுச்செயலாளராக பொறுப்பேற்பார் என்று பல்வேறு செய்திகள் அடிக்கடி மீடியாக்களில் வலம் வந்தபடியே உள்ளன. குறிப்பாக, திமுக பாணியிலேயே "செயல் தலைவர்" பதவி தேமுதிகவிலும் உருவாக போவதாக செய்திகள் வட்டமடித்தன. கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, அவரால் கட்சி பணிகளை கவனிக்க முடியவில்லை. அப்போது, ஸ்டாலின்தான் செயல் தலைவர் பதவியை ஏற்றிருந்தார்.
கட்சியில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளுமே, அப்போது ஸ்டாலின் ஒப்புதல் பேரில்தான் நடந்தது. அதுபோலவே, திமுகவுக்கு அடுத்தபடியாக தேமுதிகவும், செயல் தலைவர் பதவியை உருவாக்க போவதாக சொன்னார்கள். ஆனால், ஒருவருடமாகவே இப்படி தகவல்கள் வந்தாலும், உறுதியான முடிவு இதுவரை தேமுதிகவில் எடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில், செயல் தலைவர் பதவியில் பிரேமலதாவும், மாநில இளைஞரணி செயலர் பதவியில் விஜய பிரபாகரனும் அலங்கரிக்க போவதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் கசிந்தது.
வரும் டிசம்பர் மாத இறுதியில், கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை நடத்த முடிவாகி உள்ளதால், அதற்கு முன்பாகவே கட்சி தலைமை அலுவலகத்தில் யாகம் நடத்திவிட்டு, இந்த புதிய பொறுப்புகளை இருவரும் ஏற்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளையும் தேமுதிக மேலிடம் கையிலெடுத்த நிலையில்தான், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். இப்போது, விஜயகாந்தின் உடல் நிலையை மிகவும் சீரியஸாக கவனித்து வருகிறதாம் அவரது குடும்பம்.
இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கட்சியில் சில மாற்றங்களை செய்ய பிரேமலதா முடிவு செய்திருக்கிறாராம். அந்த முடிவுகளுக்கு அவரை சுற்றியுள்ள அவரது குடும்பத்தின் அழுத்தமே காரணம் என்கிறார்கள். அதாவது, "கட்சியின் தலைவராக உள்ள விஜயகாந்தின் உடல் நிலை மோசமாக இருப்பதையும், அவர் ஆக்டிவ்வாக கட்சி பணிகளில் ஈடுபடுவதில்லை என்பதும் வெளிப்படையான உண்மையாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அவரது பெயரில் அறிக்கை வருவதும், அவர் உத்தரவிட்டதாக வரும் செய்திகளிலும், பெரிய அளவுக்கு நம்பிக்கை யாருக்குமே வருவதில்லை. இதுவும் கட்சிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதனால், அதிகாரப்பூர்வமாக கட்சியின் தலைவர் பதவியில் நீங்கள் அமர வேண்டும்.. கட்சியின் இளைஞரணி பொறுப்பில் மகனை உட்கார வைக்க வேண்டும் என்பது உள்பட சில முக்கிய மாற்றங்களை செய்தாக வேண்டும் என்று பிரேமலதாவிடம் அவரது குடும்பத்தினர் வலியுறுத்துவது அதிகரித்து வருகிறதாம். இந்த வலியுறுத்தல்கள் நீண்ட காலமாக இருந்தாலும், இதுநாள் வரை இது குறித்து கவனம் செலுத்தாத பிரேமலதா, தற்போது இதனை பரிசீலிக்க தொடங்கியுள்ளாராம். அதனால் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது, கூட்டணி விவகாரம் உள்ளிட்ட விஷயங்களை விவாதிப்பதற்காக கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக்களை அடுத்த மாதம் கூட்ட திட்டமிட்டுள்ளார் பிரேமலதா. அந்த கூட்டத்தில் இந்த மாற்றங்கள் குறித்து விவாதிக்கவும் தயாராகிறாராம் பிரேமலதா.