அலங்காநல்லூரில் ஆட்டம் காட்டிய விஜயபாஸ்கர், சூரியின் காளைகள்..!! தங்க மோதிரம் வென்று அசத்தல்..!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை தங்க மோதிரத்தை வென்று அசத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு ஆகியவற்றைத் தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணியளவில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் சுற்றுப் போட்டிகள் தொடங்கிய நிலையில், காளைகள் ஒரு பக்கம் சீறிப் பாய்ந்தன. மற்றொரு பக்கம் மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க ஆர்வம் காட்டினர். முதல் சுற்று முடிவில் சூர்யா 3 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்தார்.
தினேஷ், கண்ணன் மற்றும் கெளதம் ஆகியோர் தலா 2 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். நடிகர் சூரியின் காளையான கருப்பணை யாராலும் அடக்க முடியவில்லை. அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளையும் வாடிவாசலில் சிறப்பான வேடிக்கையை காட்டி தங்க மோதிரத்தை வென்று அசத்தியது. 2-வது சுற்றில் அபி சித்தர் 9 காளைகளையும், விஜய் 6 காளைகளையும், விக்னேஷ் மற்றும் அருன் குமார் தலா 4 காளைகளையும் அடக்கினர்.
இதற்கிடையே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 3-வது இடத்தை பிடித்த மாடுபிடி வீரரான கார்த்தி என்பவரை ஆட்சியர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். ஏனென்றால், 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஏதாவது ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டுமே மாடுபிடி வீரர்கள் களமிறங்க அனுமதிக்கப்படுவார்கள். இதனால் மாடுபிடி வீரரான கார்த்தி வெளியேற்றப்பட்டார்.