5 நாட்களில் 31 கோடியை தாண்டும் விஜய் சேதுபதியின் மகாராஜா..! மெர்ரி கிறிஸ்மஸ்' வாழ்நாள் வசூலை முந்தியது..!
Maharaja box office: விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமாக வெளியாகி இருக்கும் மகாராஜா திரைப்படம் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது. சமீப காலங்களாக விஜய் சேதுபதிக்கு போதுமான வெற்றி கிடைக்காத நிலையில் இந்த படம் அவருக்கு கம்பேக் படமாகவும் அமைந்துள்ளது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்தப்படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இயக்கியிருக்கிறார். இந்த மகாராஜா படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப், முக்கிய வில்லனாக நடித்துள்ளார். மேலும் மம்தா மோகன்தாஸ், நட்டி (நட்ராஜ்), பாரதிராஜா, அபிராமி, சிங்கம்புலி மற்றும் கல்கி ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகியவற்றின் கீழ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட மகாராஜா படம் பாக்ஸ் ஆபிஸில் தெறிக்க விடுகிறது. ஜுன் 14ஆம் தேதி வெளியான இந்தப்படம், முதல் நான்கு நாட்களில் ரூ. 28.15 கோடியைக் குவித்துள்ளது. இது ரஜினியின் லால் சலாம் படத்தின் மொத்த வசூலை விட அதிகம். அதன்படி ஐந்தாம் நாளான ஜூன் 18ஆம் தேதி ரூ 3.50 கோடி வசூலித்துள்ளதாக sacnilk.com தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி மகாராஜா படம் ஐந்து நாட்களில் ரூ.31.65 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
மகாராஜா படத்தின் ஐந்து நாள் வசூல் விவரம்:
முதல் நாள்: ரூ 4.7 கோடி
நாள் 2: ரூ.7.75 கோடி
நாள் 3: ரூ.9.4 கோடி
நாள் 4: ரூ.6.3 கோடி
நாள் 5: ரூ 3.50 கோடி
மொத்த வசூல் 31.65 கோடி ரூபாய்
விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ திரைப்படத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்துள்ளது மகாராஜா திரைப்படம். கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மெர்ரி கிறிஸ்துமஸ், படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஜனவரி 12 அன்று வெளியானது. இந்த படத்தின் வாழ்நாள் வசூல் ரூ 26 கோடியே ஆகும்.