பிக்பாஸ் நிகழ்ச்சியால் விஜய் சேதுபதி-க்கு வந்த சிக்கல்.. காரைக்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார்..!! என்ன விஷயம்..?
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. முதன்முறையாக கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 10 வாரங்கள் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மீது காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளரிடம் ஆத்தங்குடி டைல்ஸ் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளி பரப்பு செய்யும் விஜய் டிவி, தொகுப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கூறி புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புகாருக்கு காரணம் என்னவென்றால், புகழ் பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து நடிகரும் போட்டியாளருமான தீபக் தவறான கருத்தை கூறியதாகவும், அந்த கருத்தை ஒளிப்பரப்பு செய்ததால், விஜய் தொலைக்காட்சி, தொகுப்பாளர் விஜய் சேதுபதி மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
உலக புகழ் பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ்களை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மக்கள் குடிசைத் தொழிலாக செய்து வருகிறார்கள். இயந்திரங்களின் உதவியின்றி முற்றிலும் கைகளால் செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா என வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.