சினிமாவிலிருந்து விலகல்.! நடிகர் விஜய் அறிவிப்பு .!!
நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என்று பெயர் சூட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அவரது ரசிகர்கள் இதை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.
நடிகர் விஜய் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர். சமீபத்தில் அவர் நடிக்கும் படங்களில் பல சமுதாய சீர்திருத்த கருத்துக்களையும் கூறி வருகிறார். ஒவ்வொரு ஊரிலும் அவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அவரது ரசிகர் மன்றங்கள் 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் இயங்கி வருகிறது. தமிழகம் இதுவரை பல திரை பிரபலங்களுக்கு அரசியல் பதவிகளை கொடுத்து அழகு பார்த்துள்ளது. விஜய்யும் இப்பொழுது அரசியல் களம் ஆடுவதற்கு தயாராகி விட்டார்.
சமீபத்தில் மக்களுக்கு பல உதவிகளைப் புரிந்துள்ளார். அனைத்து மக்களுக்கும் உதவுவதற்கு தன்னார்வ குழுக்கள் மட்டும் போதாது என்பதால், அரசியல் ஆளுமையும் தேவைப்படுகிறது என்று தற்போது வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது கட்சியின் பெயரை அவர் இன்று வெளியிட்டுள்ளார். "தமிழக வெற்றி கழகம்" என்று பெயரிடப்பட்ட இந்த கட்சி புனிதமான மக்கள் பணியை செய்வதற்காகவே தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கட்சியின் பெயருக்கு கீழே 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி சமத்துவத்தை மையமாகக் கொண்டு கட்சி தொடங்கப்பட்டிருக்கிறது என்பதை குறிப்பிட்டுள்ளார் விஜய்.
எப்பொழுதும் விஜய் ஜோசஃப் என்று கையெழுத்திடுபவர், இன்று சி.விஜய் என்று கையெழுத்திட்டுள்ளார். விஜய் தனது கட்சி பெயரை அறிவித்ததால், அவரது ரசிகர்கள் ஆரவாரமாக பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே இலக்கு என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுவரையில் தான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு, முழு நேரமாக மக்கள் பணியை செய்யத் தொடங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.