மாநாட்டுக்கு “வெற்றிக் கொள்கை திருவிழா” என பெயர் சூட்டிய விஜய்..!! இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்து வருகின்றன. மாநாடு திடலில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அம்பேத்கர், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் கட்டவுட் காட்சிகள் வெளியாகி பேசுபொருள் ஆக்கியிருக்கிறது. அதேபோல, ”வெற்றிக் கொள்கை திருவிழா” என்கிற வாசகம் மேடையில் உள்ள வளைவில் பொறிக்கப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறியுள்ளது. அது என்ன ”வெற்றி கொள்கை திருவிழா” என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.
தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமான விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து ஆகஸ்ட் 22ஆம் தேதி கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள வி சாலையில் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக மாநாட்டுக்கு பந்தக்கால் நடும் விழா அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் கட்சி தொண்டர்களுக்கு தலைவர் விஜய் கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், ”தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும் முழுமை பெறாதவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாக பூர்த்தி செய்ய வேண்டும். அதை அரசியல் ரீதியாக சட்டபூர்வமாக உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான் என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல், கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டே இருக்கும் ஒரு லட்சிய கனல். இன்று நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது.
நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கை பிரகடனமான மாநாடு. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் இது நம்முடைய கொள்கை திருவிழா அதுவும் வெற்றி கொள்கையை திருவிழா” என குறிப்பிட்டிருந்தார். தற்போது அந்த வாசகம் தான் மேடையிலும் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், ”எங்கள் தலைவருக்கு முன்னால் இருந்து கட்சி ஆரம்பித்த விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் அவர்களின் கொள்கை என்ன என்பதை தெளிவாக சொல்லவில்லை.
அதனால் தான் எதிர்க்கட்சியாக உயர்ந்த போதும் கூட ஒரு சில தோல்விகளுக்கு பிறகு விஜயகாந்த் கட்சியில் இருந்து பல முன்னணி நிர்வாகிகள் வெளியேறினர். கட்சியின் கட்டமைப்பு ஒன்றுமே இல்லாமல் போனது. கமல்ஹாசனுக்கு கட்டமைப்பும் இல்லை கொள்கையும் தெளிவாக கூறவில்லை. அதேவேளை தமிழ்நாட்டில் திமுகவை எடுத்துக் கொண்டால் கடுமையான தோல்விகளை தன் அரசியல் பயணத்தில் சந்தித்து இருக்கிறது. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்ததில் தொடங்கி அவரின் இறப்பு வரைக்கும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால் திமுகவின் கொள்கை அடித்தளம் தொடர்ந்து அந்த கட்சியை உயிர் கொடு இன்றளவும் வைத்திருக்கிறது.
எம்ஜிஆர் அண்ணா யுசம்தான் என் கொள்கை என்றார். அந்த கட்சி இன்று படும் பாட்டை நீங்களே அறிவீர்கள். அதனால் தான் வலுவான கொள்கை அடித்தளம் கொண்ட கட்சியாக தன் கட்சியை கட்டமைக்க நினைக்கிறார் எங்கள் தலைவர். அதனால்தான் முதல் அரசியல் மாநாட்டுக்கு கொள்கை திருவிழா என பெயர் சூட்டியிருக்கிறார் என்று தெரிவித்தனர். மேலும், தவெக-வின் கொள்கைகள் குறித்து அவர்கள் கூறுகையில், “இதுவரை தமிழ்நாட்டு மக்கள் மதிப்பு மிக்க இடத்தில் இருக்கும் தலைவர்களை வழிகாட்டியாக ஏற்று அவர்கள் பின்பற்றிய கொள்கைகளை நாங்களும் தொடருவோம். உதாரணமாக சமூக நீதி, இட ஒதுக்கீடு போன்ற விஷயத்தில் பெரியாரையும், நேர்மையான ஆட்சியை கொடுப்பதில் காமராஜரையும், எதையும் சட்டப்படி சிந்தித்து செயலாற்றுவதில் சட்டமேதை அம்பேத்கரையும் பின்பற்றுவோம்” என்றனர்.
Read More : 3 மணி நேர உல்லாசத்திற்கு 5 பவுன் நகை..!! குளிக்க சென்ற கேப்பில் கும்பிடு போட்டு கிளம்பிய இளம்பெண்..!!