மிக அதிக ஆபத்து!… வெப்பம் சராசரியை விட அதிகரிக்க 99% வாய்ப்பு!… ஆய்வில் அதிர்ச்சி!
சராசரி ஆண்டு வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் என்றும் இது சராசரியைவிட அதிகரிக்க 99% வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர் கவலை தெரிவித்துள்ளனர்.
உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 அறியப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு மையம் (WMO - World Metorological Organisation) அறிவித்தது. புவி வெப்பமயமாதலைத் தடுக்க அவசரமாக உரிய நீடித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஐ.நா. காலநிலை பாதுகாப்பு இயக்கங்கள், சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் வலுத்துள்ள நிலையில், 2023-ஆம் ஆண்டின் உலக சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்ற கணிப்பு கவனம் பெற்றது. இந்நிலையில் இன்னொரு அதிர்ச்சியாக 2023-ஆம் ஆண்டின் உலக சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக இருக்க 99 சதவீத வாய்ப்புள்ளதாக இன்னொரு அறிக்கை வெளியாகியுள்ளது. இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் வரையறுக்கப்பட்டு, அந்த ஒப்பந்தமானது 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்தானது. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்திட்டன. உலக வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பாரீஸ் ஒப்பந்தத்தின் முக்கிய இலக்காக வரையறுக்கப்பட்டது. ஆனால், அக்டோபர் 2023-ன் முடிவடைந்த காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சர்வதேச சராசரி வெப்பம் 1.4 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டின் சராசரி வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸாக இருக்கும் என கணித்துள்ளது.
கலிபோர்னியாவை மையமாகக் கொண்ட ’பெர்க்லி எர்த்’ அமைப்பு இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், எல் நினோ ஆண்டில் கடல் மேல்பரப்பு வெப்பமாவது நடக்கும் என்றாலும் இந்த ஆண்டு வெப்பமடைதல் ஆச்சரியமளிக்கும் வகையில் நடந்துள்ளது. அதனால் சராசரி ஆண்டு வெப்பம் 1.5 டிகிரி செல்சியஸ் என்று 1850-1900 சராசரியைவிட அதிகரிக்க்கும் என்று கணிக்கிறோம். இதற்கான வாய்ப்பு 99 சதவீதம் உள்ளது என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
2023 தொடங்கி ஜூன் தொடங்கி செப்டம்பர் வரையிலான 6 மாதங்களுமே சராசரி வெப்பநிலை புதிய இலக்குகளை எட்டியுள்ளது. 2022-ல் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகிய பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்றம் வரலாறு காணாத அளவு அதிகமாக இருந்தது. அது அப்படியே 2023-ல் மேலும் அதிகரித்துள்ளது. தொழில் புரட்சி காலத்துக்கு முந்தைய அளவைவிட 50 சதவீதம் அதிகமாக கரியமில வாயு வெளியேற்றம் தற்போது உள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பாவின் பனிப் பாறைகள் உருகுதலும் அதிகரித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி நிலபரப்பை சேர்த்தால் எவ்வளவோ அதைவிட அதிகளவிலான பனிப் பாறைகள் உருகியுள்ளன.
இந்த ஆண்டு எல் நினோ முன்கூட்டியே உருவாகியுள்ளது. அதேபோல் எல்நினோவின் இரண்டாவது ஆண்டு முதல் ஆண்டைவிட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய மோசமான காலநிலையால் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிக்கும், பெரியளவில் மக்கள் இடம் பெயர்தலும் அதிகரிக்கும் என்றும் விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்