இந்த 3 மாவட்டங்களுக்கும் இன்று மிக கனமழை எச்சரிக்கை..!! மற்ற மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கப் போகுது..!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் கொட்டித் தீர்த்து வருகிறது.
முன்னதாக தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, இன்று மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, புதுக்கோட்டை, நெல்லை, தஞ்சை, கன்னியாகுமரி, திருவாரூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களிலும் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.