வெளுத்து வாங்கப்போகும் அதி கனமழை..!! தமிழக மக்களுக்கு அலர்ட்..!! 4 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்புப் படை..!!
தமிழ்நாட்டில் வரும் 22ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 முக்கிய மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி உள்பட, 21 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், தென்மாவட்ட கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், சில மாவட்டங்களில் மிக கனமழையும், பல மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழையும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வரும் 20, 21ஆம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் மே 22ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. எனவே, கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கு ஏற்கனவே அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு, மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதாவது, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களுக்கு தலா 3 குழுவினரும், கோவைக்கு ஒரு குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு குழுவிலும், 30 வீரர்கள் இருக்கின்றனர். இவர்கள் தேவையான மீட்பு உபகரணங்களுடன் தயாராக உள்ளனர். அதேபோல, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
Read More : ’மகள் தற்கொலைக்கு காரணமே விஜய் ஆண்டனி தான்’..!! புதிய புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா..!!