தமிழகத்தில் ஒரு அதிசய சைவ கிராமம்! 100 வயது வரை வாழும் மக்கள்!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஊர் மக்கள் அனைவருமே சைவமாக உள்ள ஒரு அதிசய கிராமம் இருக்கிறது. கடந்த 55 வருடங்களாக இந்த கிராமத்தில் உள்ளவர்கள் சைவ உணவுகளையே உட்கொண்டு வருகின்றனர்.
வாடிமனைப்பட்டி எனும் கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 1963-ம் ஆண்டிற்கு முன்னர் சைவம் அசைவம் என அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு வந்துள்ளனர். 1963-ம் ஆண்டு கிராமத்திற்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க சங்கத்திலிருந்து வந்த முத்தையா என்ற சாமியார், மாமிசம் உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறியுள்ளார். அதிலிருந்து அந்த கிராம மக்கள் சைவத்திற்கு மாறியுள்ளனர்.
இக்கிராமத்து ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் வெளியூர் பெண்களும் அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், சைவத்திற்கு மாறி விடுகின்றனர். அதே போல ஆடு கோழிகளை வளர்த்து விற்றால் அவை பலி கொடுக்கவோ அல்லது இறைச்சிகளுக்கோ பயன்படுகிறது என்பதால் இங்கு ஆடு மற்றும் கோழிகள் வளர்க்கப்படுவதில்லை. பசு மாடுகளை மட்டும் வளர்த்து வருகின்றனர்.
கிராம கண்மாயில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அவர்கள் பிடிப்பது இல்லை. இங்குள்ள பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை யாருக்கும் மது பழக்கம் கிடையாது. அதே போல் வெளியூரில் உறவினர் வீட்டுக்கு சென்றால் கூட சைவ உணவுகளை மட்டுமே உண்பதாக இங்கு வசிக்கும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்றாலும், திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அசைவம் சாப்பிடுவது இல்லை. இன்று அல்ல வரும் நாட்களிலும் அசைவம் சாப்பிட மாட்டோம் என்கிறார்கள் வாடிமனைப்பட்டி கிராம மக்கள்.