முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திமுக கூட்டணி கட்சிக்கு, நாடகம் போட தயாராகி விட்ட விசிக திருமாவளவன்...! அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

Vck Thirumavalavan is ready to play a role in the DMK alliance.
06:14 PM Dec 19, 2024 IST | Vignesh
Advertisement

கடந்த 4 ஆண்டுகளில், பட்டியல் சமூக மக்களுக்கு, தங்கள் அரசு இழைத்த கொடுமைகளை மூடிமறைக்கும் முயற்சியாக திமுகவினரும் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவருக்கு என்னென்ன அவமரியாதையை ஏற்படுத்தினார்கள் என்பதையும், அவர் மறைவுக்குப் பிறகு நமது அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி இழிவுபடுத்தினார்கள் என்பதையும், பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி அவர்களும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் அம்பலப்படுத்திய பிறகு, இந்தி கூட்டணி, தங்கள் கடந்த கால வரலாறு, நாட்டு மக்களுக்குத் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

இன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடுமையான காயம் ஏற்படும் வகையில் கைகலப்பில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் நாகாலாந்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஒரு சகோதரியை மிரட்டும் வகையில் சத்தமிட்டிருக்கிறார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரின் இந்த வெட்கக்கேடான நடத்தை, தனக்குக் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் புகார் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் இன்று வி.சி.க சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ் செய்த தவறுகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசப்பட்டவை, காங்கிரஸ் மீது ‘வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்’ என்று பூசி மெழுகுகிறார் திருமாவளவன். கடந்த 2012ஆம் ஆண்டு, அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கரை அவமதித்ததற்காக, காங்கிரஸையும், திமுகவையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் அவரே போராட்டம் நடத்தியதை மறந்துவிட்டார். திருமாவளவன் அவர்களது ஆவேசம் தவறானது. தனது கூட்டணிக் கட்சிகளுக்காக, எந்த வேஷம் வேண்டுமானாலும் போடத் தயாராகிவிட்டார். தன்னைச் சார்ந்திருக்கும் மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் அவருக்கு இல்லை. கடந்த 4 ஆண்டுகளில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டித்து, திமுகவுக்கு எதிராக ஒரு போராட்டம் கூட அவர் நடத்தியதில்லை. கடந்த 4 ஆண்டுகளில், பட்டியல் சமூக மக்களுக்கு, தங்கள் அரசு இழைத்த கொடுமைகளை மூடிமறைக்கும் முயற்சியாக திமுகவினரும் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கிராமத்தின் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலந்த குற்றம், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததற்காகப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மீது திமுக பிரமுகர் தாக்குதல் நடத்தினார். திமுக, அந்த நிர்வாகியை இடைநீக்கம் செய்து, தேர்தலுக்கு முன் அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தது. தமிழ்நாட்டில் உள்ள பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்கள் பெரும்பாலும் திமுக நிர்வாகிகளால் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். தி.மு.க அரசு இதைப் பார்த்தும் பாராமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது. விசிக வாயை மூடி மௌனமாகவே இருக்கிறது.

மத்திய அரசின் SCSP திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணம், பட்டியல் சமூக மக்கள் நலனுக்காகச் செலவிடப்படாமலோ, அல்லது அரசின் பிற திட்டங்களுக்கோ மடைமாற்றப்பட்டது. திமுக அரசின் பட்டியல் சமூக மக்கள் விரோதச் செயல்பாடுகளின் பட்டியல் இன்னும் போய்க் கொண்டே இருக்கும். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளுக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கும் திமுகவினர், அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு உரிய மதிப்பை அளிக்காத, தேர்தலில் அவரைத் தோற்கடிக்கக் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியை அம்பலப்படுத்தியதற்காக, உள்துறை அமைச்சர் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

பல தசாப்தங்களாக மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியிலிருந்த திமுக மத்திய அமைச்சர் பதவிகளைப் பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்தியது. அண்ணல் அம்பேத்கரின் பெருமையைப் போற்றும்படியாக பலவற்றைச் செய்திருக்க முடியும் என்ற நிலையில், அண்ணலின் மரியாதைக்காக என்ன செய்தார்கள்? இன்று எத்தனை நாடகங்களை அரங்கேற்றினாலும், காங்கிரஸும், திமுகவும் மற்றும் அவர்களது கூட்டணிக் கட்சிகளும், பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுக்குச் செய்த அவமரியாதையையும், பட்டியல் சமூக மக்களுக்கு அவர்கள் செய்த களங்கங்களின் வரலாற்றையும் அழிக்க முடியாது. பிரதமரும், உள்துறை அமைச்சரும், உங்கள் போலித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளனர். நமது நாட்டு மக்களும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Tags :
AmbedkarAmitshaannamalaiDmkmk stalinmodiTamilanaduthirumavalavan
Advertisement
Next Article