பரபரப்பு தீர்ப்பு: 'கியான்வாபி' மசூதியில் 'இந்துக்கள்' வழிபாடு நடத்த நீதிமன்றம் அனுமதி.!
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள கியான்வாபி மசூதி, பண்டைய ஹிந்து கோவிலை இடித்து கட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து மசூதி தொடர்பான வழக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மசூதியை ஆராய்ந்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கும் படி இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்திய தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில் உடைந்த இந்து தெய்வங்களின் சிலை மற்றும் சிவலிங்கம் இருந்ததற்கான புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் மசூதியில் இந்து பக்தர்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது.கியான்வாபி மசூதியின் சீல் செய்யப்பட்ட அடித்தளத்தின் எல்லைக்குள் இந்து பக்தர்கள் தங்கள் வழிபாடுகளை செய்து கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த சட்டப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருப்பதாக இந்தக் கோவிலில் வழிபாடு செய்து வந்த வியாசா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, பாதுகாப்பு அதிகாரிகளால் சீல் செய்யப்பட்டு இருக்கும் மசூதியின் அடித்தளத்தில் இந்து பக்தர்கள் வழிபாடு செய்ய உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் வருகின்ற 7 நாட்களுக்குள் வழிபாட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் எளிதாக்கி கொடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த தீர்ப்பு தொடர்பாக பேசியிருக்கும் இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் "வியாஸ் கா தெகானாவில் பூஜை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. தேவையான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு 7 நாட்கள் அவகாசம் அளித்திருப்பதாக" தெரிவித்திருக்கிறார் .