'சட்டசபைக்குள் சத்தமில்லாமல் பேச்சு.." மீண்டும் பாஜக பக்கம் சாய்கிறதா அதிமுக.? வானதி தங்கமணி உரையாடல்.! பிண்ணனி என்ன.?
தமிழக அரசியலில் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டசபையின் முதல் நாள் கூட்டத்தில் ஆளுநரின் வெளிநடப்பிற்கு, எடப்பாடி பழனிச்சாமி கருத்து கூற மறுத்துவிட்டார். ஆளுநரின் வெளிநடப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு நான் எதிர்க்கட்சிக்காரன் என்ற பதிலை மட்டும் சொல்லிவிட்டு சென்றார்
இதனால் அதிமுக மற்றும் பிஜேபி கட்சிகள் இடையே கூட்டணி அமைவது தொடர்பான சந்தேகங்கள் எழும்பியது. இந்நிலையில் தமிழக சட்டசபைக்குள், பாரதிய ஜனதா கட்சியின் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் ரகசியமாக பேசியிருப்பது அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாகி இருப்பதாக பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2021 ஆம் வருட சட்டமன்றத் தேர்தல் வரை பாஜக மற்றும் அதிமுக ஒரே கூட்டணியில் பயணித்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கியமான கட்சியாக அதிமுக விளங்கி வந்தது. இந்நிலையில் பாஜக தலைவராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளை விமர்சனம் செய்து வந்தார். இது அந்த கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும் என தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தங்களது கட்சி, பாஜக உடனான கூட்டணியை முடித்துக் கொண்டதாக தெரிவித்தார். மேலும் இனி எந்த காலத்திலும் அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைக்காது என தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில்தான் தமிழக ஆளுநரின் வெளிநடப்பு குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, நான் எதிர்க்கட்சிக்காரன். இது ஆளுநருக்கும் ஆளுங்கட்சிக்கும் நடக்கும் பிரச்சனை எனக் கூறினார். பாஜக சார்புடைய ஆளுநரை எடப்பாடி நேரடியாக விமர்சிக்காமல் இருப்பதே, எதிர்காலத்தில் அந்த கட்சியுடன் ஆன கூட்டணிக்கு வழி வகுக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் யூகித்து வந்தனர். இந்நிலையில் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் சட்டசபையில் ரகசியமாக 15 நிமிடங்களுக்கு மேல் பேசி இருக்கின்றனர் . ஒரு கட்சியை நேரடியாக எதிர்க்கும் கட்சி அதன் உறுப்பினருடன் இவ்வளவு நேரம் ரகசியமாக பேசுவதன் பின்னணி என்ன.? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதிமுகவின் இது போன்ற நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் போது மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.