தொடர் தடுமாற்றம்!! ஜோ பைடனுக்கு என்னாச்சு? உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 'புதின்' என அழைத்த ஜோ பைடன்..!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் குழப்பமான பேச்சுக்கள் தொடர்கதையாக உள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ‘புதின்’ என சொல்லி அறிமுகம் செய்தார். அடுத்த சில நொடிகளில் அதை திருத்திச் சொன்னார். அது இப்போது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட களத்தில் உள்ளனர். அதிபர் தேர்தலில் 79 வயது டொனால்ட் டிரம்ப்பை 81 வயதாகும் ஜோ பைடன் எதிர்கொள்கிறார்.
ஜோ பைடனுக்கும், டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே முதன்முறையாக கடந்த வாரம் நேரடி விவாதம் நடைபெற்றது. ஆப்கனிலிருந்து அமெரிக்க படை வெளியேறியது மற்றும் பணவீக்கம் குறித்து அதிபர் பைடனை டிரம்ப் கடுமையாக தாக்கி பேசினார். இந்த விவாதங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இதனை அடுத்து அதிபர் பைடன் அடுத்து பேசுவார் என்றும் அவர் டிரம்ப் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து காரசாரமாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பைடனின் பேச்சுக்களில் தடுமாற்றம் ஏற்பட்டது. அவரது பேச்சில் வேகம் இல்லை எனச் சொல்லப்பட்டது. அதற்கு பயணம் மற்றும் தூக்கமின்மையை காரணமாக சொல்லி இருந்தார் பைடன். அவர் அதிபர் வேட்பாளராக போட்டியிடக் கூடாது என சொந்தக் கட்சி உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இருந்தாலும் அந்த ரேஸில் தான் நீடிப்பதாக அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து, தற்போது வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெலன்ஸ்கியை வரவேற்று உரை நிகழ்த்தினார். பின்னர் ஜெலன்ஸ்கியை பேச அழைத்த பைடன் அவரது பெயரை அதிபர் புதின் என்று தவறாக குறிப்பிட்டதால் சலசலப்பு எழுந்தது.
பின்னர் சுதாகரித்து கொண்ட பைடன், புதினை விரைவில் வீழ்த்த இருக்கும் ஜெலன்ஸ்கியை பேச அழைப்பதாக கூறி சமாளித்தார். இதனிடையே மற்றொரு செய்தியாளர் சந்திப்பின் போது துணை அதிபர் கமலா ஹாரிஸ் என்பதற்கு பதிலாக டிரம்ப் என்றும் தவறுதலாக ஜோ பைடன் குறிப்பிட்டார். நரம்பியல் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக பொது மேடைகளில் தடுமாறி வரும் ஜோ பைடன், கடந்த மாத இறுதியில் டிரம்ப் உடனான நேரடி விவாதத்தின் போது தொடர்பில்லாமல் பேசியதும், பேச தடுமாறியதும் பெரும் விமர்சனத்து உள்ளாகியுள்ளது.
Read more | நேபாளம் நிலச்சரிவு | ஆற்றில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டதில் இதுவரை 7 பேர் பலி..!!