அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்!… ஈரான் ஆதரவு துணை இராணுவத் தளபதி கொல்லப்பட்டார்!
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஈரான் ஆதரவு துணை இராணுவத் தளபதி கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை (CENTCOM) மையம் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானின் புரட்சிகர படையின் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள், அந்த பிராந்தியத்தில் உள்ள ஈராக், சிரியா, ஜோர்டானில் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேல் -நடத்தி வரும் போரில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், பயங்கரவாதிகள், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக, ஜோர்டானில் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதில் கடந்த 3ம் தேதி மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என, எச்சரித்திருந்தது.
இதன்படி, ஈராக் மற்றும் சிரியாவில், பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை குறி வைத்து, அமெரிக்க விமானப் படை போர் விமானங்கள் கடும் தாக்குதலில் ஈடுபட்டன. இதன்படி, 85 இடங்களில், 125 ஏவுகணைகளை அமெரிக்க போர் விமானங்கள் செலுத்தின. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்தநிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வாகனமொன்றை இலக்குவைத்து புதன்கிழமை இரவு உள்ளூர் நேரபடி சரியாக 9.30 மணி அளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த மூவரில் ஈரான் ஆதரவு கட்டாய்ப் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்த அபு பக்கீர் அல்-சாதி என்ற தளபதியே கொல்லப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை (CENTCOM) மையம் தனது எக்ஸ் பதிவில், அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்களை நேரடியாகத் திட்டமிடுவதற்கும் பங்கேற்பதற்கும் பொறுப்பான கத்தாயிப் ஹெஸ்பொல்லா தளபதியை கொன்றதாக தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த பகுதி, பாக்தாத்தின் கிழக்கே, "ஆயுதப் பிரிவுகளின் கோட்டையாக கருதப்படுகிறது"