கலிபோர்னியாவில் வணிக கட்டிடம் மீது விமானம் மோதி விபத்து..!! 2 பேர் பலி.. 18 பேர் காயம்
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வணிக கட்டிடத்தின் மேற்கூரையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர். ஆரஞ்சு கவுண்டி நகரமான புல்லர்டனில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அருகில் உள்ள வணிக கட்டிடங்களில் இருந்து மக்களை உடனடியாக வெளியேற்றினர்.
இந்த விபத்தில் தையல் இயந்திரங்கள் மற்றும் ஜவுளி இருப்பு இருந்த கிடங்கு சேதமடைந்தது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கியது ஒற்றை எஞ்சின் கொண்ட RV-10 ரக விமானம் என்று ஃபெடரல் ஏவியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை..
முன்னதாக, நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெருவில் புத்தாண்டு 2025 கொண்டாட்டத்தின் போது வேகமாக வந்த கார் கூட்டத்தின் மீது மோதியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதல் என விசாரணையில் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து டொனால்ட் டிரம்பிற்கு சொந்தமான ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர. இந்த தொடர் சம்பவங்களுக்கு பின்னால் தீவிர தாக்குதல் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.