சவுக்கு சங்கர் வழக்கில் அவசர கதியில் உத்தரவு பிறப்பிப்பு..!! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக திரும்பிய 3-வது நீதிபதி..!!
சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவரசர கதியில் உத்தரவு பிறப்பித்துள்ளதாக 3-வது நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக பிரபல யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மே 12ஆம் தேதி அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த குண்டர் சட்ட நடவடிக்கையை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்த நிலையில், இது தொடர்பாக அரசு தரப்பு பதில் அளிக்க நீதிபதி பாலாஜி உத்தரவிட்டிருந்தார். மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கு 3-வது நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணையின்போது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவரசர கதியில் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்திருக்கிறார். அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதி பாலாஜியுடன் கலந்து ஆலோசிக்காமல் உத்தரவு பிறப்பித்ததில், காவல்துறைக்கு எதிராக பாரபட்சத்துடன் நடந்துள்ளார் என்பதை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதையும் நீதிபதி ஜெயச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவொரு நபரும் நியாயமான விசாரணை இல்லாமல் தீர்ப்பளிக்கக்கூடாது என்பது சட்டக்கல்லூரிகளில் கற்பிக்கப்படும் முதல் பாடம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
Read More : ஒரு மாதத்திற்கு இதை மட்டும் தொடாதீங்க..!! உடலில் நிகழும் அதிசயத்தை நீங்களே பார்ப்பீங்க..!!