979 பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு.. தகுதிகள் என்னென்ன..? விண்ணப்பிப்பது எப்படி?
ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான குடிமைப் பணித்தேர்வு அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் உட்பட 23 உயர் பதவிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்துகிறது. அந்த வகையில் நடப்பாண்டு 979 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வு வரும் மே 25 ஆம் தேதியும், இதில் தகுதி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 22 ஆம் தேதியும் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
வயது வரம்பு : யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுத தேர்வர்களுக்கு 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயதை கடந்திருக்கக் கூடாது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.
கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்கள்
- யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுத அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக கீழ் ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வை எழுதலாம். ஒபிசி பிரிவினர் 9 முறை மட்டும்தான் எழுத முடியும். அதே போன்று மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவு, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஒபிசி பிரிவு 9 முறை எழுதலாம். பொதுப் பிரிவினர் 6 முறை எழுதலாம்.
விண்ணப்பிப்பது எப்படி? யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்விற்கு https://upsconline.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதில் OTR Profile பதிவு செய்து, பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.