தூள்..! அமைப்பு சாரா தொழிலாளர் ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.1,200-ஆக உயர்வு..! தமிழக அரசு தகவல்
கடந்த மூன்றரை ஆண்டுகளில் 20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 18,81,079 புதிய உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் போதெல்லாம் தொழிலாளர்களின் உரிமைகளையும், வாழ்நிலையையும் உயர்த்துவதில் தனி கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் தொழிலாளர் நலத் துறையும், தொழிலாளர் நல அமைச்சகமும் ஏற்படுத்தப்பட்டன. தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்த உதவியாக 1971-ல் தொழிலாளர் நல வாரியத்தை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரம் உயர எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார் கருணாநிதி. அதேபோல, ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, தொழிலாளர் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால், கடந்த மூன்றரை ஆண்டுகளில் 20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 18,81,079 புதிய உறுப்பினர்களைப் பதிவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர் வாரியங்களில் பதிவு செய்துள்ள 25,35,546 உறுப்பினர்களுக்கு ரூ. 2,106 கோடி வரையிலான நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர் வாரிய உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.1,200-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி, வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்காக சிரத்தையுடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழக அரசு, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவர்களுக்கான நலத் திட்டங்களை வகுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.