’கணவரின் அனுமதியின்றி அவரின் தனிப்பட்ட தகவல்களை மனைவியிடம் தர முடியாது’..!! ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவன் - மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பாக அந்த பெண் தொடர்ந்த வழக்கில், பாராமரிப்பு தொகையாக அவருக்கு ரூ.10,000 மற்றும் அவரின் மகளுக்கு ரூ.5,000 மாதந்தோறும் வழங்க கணவனுக்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், அந்த பெண் மீண்டும் ஒரு வழக்கை கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது கணவர் இருக்கும் இடம் தெரியவில்லை. அவர் எங்கோ தப்பியோடிவிட்டதால், தங்களால் நீதிமன்ற உத்தரவின்படி பாராமரிப்பு தொகை பெற முடியவில்லை. இதனால், தனது கணவரின் ஆதார் தகவல்கள், அவர் எங்கு உள்ளார், அவரது செல்போன் விவரங்கள் உள்ளிட்டவற்றை தனக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த பெண் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கணவரின் ஒப்புதலுடன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் அவரின் தகவலை பெற்று மனுதாரருக்கு தர ஆதார் அமைப்புக்கு உத்தரவிட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த அந்த பெண், திருமண உறவு தங்களுக்குள் இருப்பதால், கணவரின் அனுமதியின்றி அவரின் தகவல்களை பெற தனக்கு முழு உரிமை உள்ளதாக வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், திருமணம் என்ற ஒப்பந்தத்தின் மூலம் தனிநபரின் உரிமைகளை பறிக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால், கணவனின் அனுமதியின்றி அவரின் தகவல்களை மனைவியால் பெற முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.