பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு... சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை...! டிஜிபி கொடுத்த விளக்கம்...!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக பொதுவெளியில் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானது என டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று ஞானசேகரனின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில் லேப்டாப், ஹார்டு டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், ஞானசேகரன் அணிந்திருந்த தொப்பி, பட்டா கத்தி ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த வாரம் சென்னை காவல் ஆணையர் அருண் பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஞானசேகரன் தனது செல்போனை, ‘பிளைட் மோடில்’ வைத்திருந்ததாக தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாணவி சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம் ஞானசேகரன் ‘சார்’ என குறிப்பிட்டு பேசியது உண்மைதான் என தெரிவித்தாகவும், திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகின. சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் அப்படி எந்த ஒரு தகவலும் வழங்கப்படவில்லை என டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
இது டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் “ஞானசேகரன் ஒரு சாரிடம் பேசியதாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாகவும், ‘சிறப்புப் புலனாய்வுக் குழு, பாதிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை ஞானசேகரனிடம் பறிமுதல் செய்துள்ளதாகவும், திருப்பூரைச் சேர்ந்த ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுகின்றன.
இந்த வழக்குகள் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக பொதுவெளியில் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை. இத்தகையை ஆதாரமற்ற தகவல்கள், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், இந்த வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையைப் பாதிக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.