உத்தரகாண்ட்டில் "வரலாற்று நிகழ்வு.. 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கங்களுடன்.."! குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டம்..!!
2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அஜெண்டாக்களில் ஒன்றான பொது சிவில் சட்டம் உத்தரகாண்ட் பாராளுமன்றத்தில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கங்களுடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு நாட்டில் ஒரு சட்டம் இவ்வாறு ஏற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பொது சிவில் சட்ட மசோதாவை உத்தரகாண்ட் சட்டமன்றம் இன்று நிறைவேற்றி இருக்கிறது. செவ்வாய்க்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா இன்று குரல் வாக்கெடுப்புகள் மூலம் ஜெய் ஸ்ரீ ராம் கோசத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.மதம் வேறுபாடின்றி அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான திருமணம், விவாகரத்து, நிலம், சொத்து மற்றும் வாரிசுரிமை சட்டங்களை நிறுவும் நோக்கத்துடன் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
முன்னதாக இன்று இந்த மசோதா மீது விரிவான விவாதம் நடைபெற்றது. சட்டசபையில் பேசிய முதல்வர் தாமி, இது சாதாரண மசோதா அல்ல. "இந்தியா ஒரு பரந்த தேசம், மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் முழு நாட்டிலும் செல்வாக்கு செலுத்தக்கூடிய முன்னுதாரணங்களை அமைக்க இது ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. வரலாற்றை உருவாக்குவதற்கும், ஒட்டுமொத்த தேசத்திற்கும் வழிகாட்டும் பாதையை வழங்குவதற்கும் நமது மாநிலத்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வகுத்துள்ள நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து, நாடு முழுவதும் உள்ள மற்ற மாநிலங்களும் இந்த சட்டத்தை அமல்படுத்துவது கட்டாயமாகும்," என்று அவர் மேலும் கூறினார்.
உத்தரகாண்ட் அமைச்சர் பிரேம் சந்த் அகர்வால் கூறுகையில், UCC கமிட்டி 72 கூட்டங்களை நடத்தி, மின்னஞ்சல்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் 2,72,000 க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்றது. பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர் என்று தெரிவித்தார்.
இந்த மசோதாவில் திருமணம் விவாகரத்து வாரிசுகள் மற்றும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவுகள் தொடர்பான சட்டங்களும் வரைமுறைகளும் இடம் பெற்றுள்ளது. இந்தச் சட்டம் திருமண உறவு முறை இல்லாமல் சேர்ந்து வாழ்பவர்களும் தங்களது உறவுமுறை குறித்து கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என வற்புறுத்துகிறது.