8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டணமின்றி சீருடைகள், பாடநூல்கள்....! மத்திய அரசு சூப்பர் தகவல்
தேசியக் கல்விக்கொள்கை 2020-ன் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விரிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
சிறப்பு தேவையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பிரதமரின் ஊட்டச் சத்து திட்டத்தின் கீழ், மதிய உணவு வழங்குவதையும் கட்டணமின்றி கட்டாயம் கல்வி பெறும் உரிமைச் சட்டம் 2009-ன் படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறப்பு பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு கட்டணமின்றி சீருடைகள், பாடநூல்கள் போன்றவை கிடைப்பதையும் உறுதி செய்யுமாறு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதை நோக்கமாக கொண்ட தேசிய கல்விக்கொள்கை கல்வி பெறும் உரிமையை நனவாக்குகிறது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12 (1) (சி)-ன் படி மாணவர் சேர்க்கைக்கான செலவில் 25 சதவீதம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மழலையர் பள்ளியிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வகை செய்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.