Udhayanidhi Stalin | அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!!
பொதுவெளியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் பேசியிருந்தார். இது இந்து இயக்கங்கள் மற்றும் பாஜகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தன. இதுதொடர்பாக நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இப்படி தன் மீது பதியப்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என உதயநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை ஒரே வழக்காக மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும், மற்றபடி வழக்கின் விசாரணைக்கு தடை கோர வில்லை என்று அந்த மனுவில் கோரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது அப்போது, “அமைச்சர் உதயநிதி பொதுவெளியில் பேசும்போது கவனமுடன் இருக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது. மேலும், அடிப்படை உரிமைகளை பாதிக்கும் பிரிவில் உதயநிதி தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருப்பது சரியானது அல்ல. எனவே, மனுவில் மாற்றங்கள் செய்து 3 வாரங்களுக்குள் மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
Read More : மேடையில் அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் வாக்குவாதம் செய்த அமைச்சர் பொன்முடி..!! நடந்தது என்ன..?