சனாதன எதிர்ப்பு பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன்.!! நீதிமன்றத்தில் ஆஜராக அதிரடி உத்தரவு.!
கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர்.திருமாவளவன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர் .
இந்த நிகழ்ச்சியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் டெல்லி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். மேலும் இவரது பேச்சு வடமாநிலங்களில் மிகப்பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பீகார் வழக்கறிஞரான கௌசலேந்திர நாராயணன் என்பவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
சனாதன தர்மத்திற்கு எதிராக பேசிய எம்எல்ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது. மேலும் வருகின்ற பிப்ரவரி 13-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவும் ஆணையிட்டுள்ளது.சனாதன தர்மம் குறித்து பேசிய பிரச்சனையில் வட இந்திய சாமியார்கள் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு பல கோடி ரூபாய் விலை நிர்ணயித்ததும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது