உதயநிதி ஸ்டாலின் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்...! தமிழக பாஜக அதிரடி
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலை கற்றுத் தர வேண்டும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநரை, தரங்கெட்ட முறையில் கண்ணிய குறைவாக விமர்சித்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நேர்மறை அரசியலை கற்றுத் தர வேண்டும். கடந்த ஆண்டு ஆளுநர் குறித்து உதயநிதி கண்ணியமற்ற முறையில் பேசியதற்கு நடவடிக்கை எடுக்காததன் விளைவு இன்று தமிழகத்தில் மோசமான தனிநபர் தாக்குதலுக்கும், வெறுப்பு அரசியலுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கள் கண்ணியற்றதாக உள்ளன. எனவே உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி கூறிய கருத்துக்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பொது மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் அருவருக்கத் தக்க தனிநபர் தாக்குதல் மறைந்து, கண்ணியமான அரசியல் சூழ்நிலைக்கு வித்திட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு மாநிலத்தின் முதல் மகனாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வழிநடத்தக்கூடிய தலைமகனாக விளங்கக்கூடிய ஆளுநர் பொறுப்பை கொச்சைப்படுத்தும் விதத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரும்ப பெற வேண்டும்.
ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு? ஆளுநர் யார் மக்களின் பிரதிநிதியா? ஆளுநர் ஒரு போஸ்ட்மேன், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் சமீபத்திய பேச்சை குறிப்பிட்டு, ஆளுநர் தன்னுடைய சித்தாந்தங்களை சொன்னால் தமிழக மக்கள் ஆளுநர் ஆர்.என். ரவியை செருப்பால் அடிப்பார்கள். அவர் பெயர் ஆர்.என். ரவி அல்ல. ஆர்எஸ்.எஸ்.ரவி என்று தனிப்பட்ட முறையில் தமிழகத்தின் இளம் தலைவர், மரியாதைக்குரிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதுபோன்று கடமை,கண்ணியம் கட்டுப்பாடு, என அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு பொறுப்பற்ற முறையில் பேசுவது நியாயமா..?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று, தானே நேரடியாக களத்தில் இறங்கி மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தனிப்பட்ட முறையில் சென்று மக்களுக்கான பிரச்சினைகளை தீர்த்து, தமிழக இளைஞர்களுக்கும் தமிழக அரசுத் துறையை அதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதேபோன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, உரிய முறையில் கட்சியிலும் ஆட்சியிலும் அரசியலிலும் சிறப்பாக செயல்பட நேர்மறை அரசியலை கற்றுக் கொடுத்து முன்மாதிரியான தலைவராக, தந்தையாக முதல்வராக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.