துணை முதல்வர் பதவி கிடைக்குமா.? செய்தியாளர்களின் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலினின் பதில்.!
தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது தாத்தா மற்றும் முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவரது திரு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஆழ்வார் திருநகரில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினிடம் சென்று வாழ்த்துக்கள் பெற்ற அவர் தனது தாயார் துர்கா ஸ்டாலின் இடமும் வாழ்த்துக்களை பெற்றார். பின்னர் தனது தந்தைக்கு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் அதிகாரங்கள் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கிய அவர் தாய் தந்தையிடம் ஆசி பெற்ற பின்னர் பெரியார் மற்றும் கலைஞரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து திமுக கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் திமுகவின் மூத்த தொண்டர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார். மேலும் 500 மாணவர்களுக்கு கல்விக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் உதயநிதி ஸ்டாலின்.
அப்போது பேசிய அவர் எல்லா கட்சியின் வளர்ச்சிக்கும் தொண்டர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகமே முக்கிய காரணம் என தெரிவித்தார் தொண்டர்கள் இல்லாமல் எந்த கட்சியாலும் வளர முடியாது எனவும் கூறினார். துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் இதனை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முதல் வருமான மு க ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.