உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க திட்டம்..!! அது ஒருபோதும் நடக்காது..!! எடப்பாடி பழனிசாமி காட்டம்..!!
ஸ்டாலினுக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க திட்டமிட்டு வருகின்றனர், அது ஒருபோதும் நடக்காது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
தருமபுரியில் 100 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ஏழைப் பெண்களின் திருமணம் தடையின்றி நடக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா, தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவி திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் 12 லட்சம் குடும்பத்தினர் பயனடைந்தனர். ஆனால், இந்த திமுக அரசின் பொம்மை முதல்வர் அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்.
நீட் தேர்வு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேசி வருகின்றனர். கடந்த 2010இல் திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்தபோது தான் நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. காங்கிரஸ்-திமுக இணைந்து கொண்டு வந்த நீட் தேர்வை தற்போது எதிர்ப்பதும் அந்த இரு கட்சிகளும் தான்.
திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை வைத்துக் கொண்டு அதை என்ன செய்வதென தெரியாமல் அக்கட்சி தலைமை தவிக்கிறது. இவையெல்லாம், திமுக ஊழல் செய்வதற்காகவே ஆட்சிக்கு வந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இதற்கெல்லாம் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். மன்னராட்சி முறையைப் போல, திமுகவினர் குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர்.
கருணாநிதிக்கு பின்னர் மு.க.ஸ்டாலின், தற்போது ஸ்டாலினுக்கு பின்னர் உதயநிதியை முதலமைச்சராக்க திட்டமிட்டு வருகின்றனர். அது ஒருபோதும் நடக்காது. திமுகவில் கட்சி முன்னோடிகளுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பில்லை. அடுத்த தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும்" என்று பேசினார்.