U19 World Cup: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா..!
15-வது U19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்ச்சமாக லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரங்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பணி 3 விக்கெட்டுகளும், முஷீர் கான் 2 விக்கெட்டுகளும், நமன் திவாரி மற்றும் சவுமி குமார் பாண்டே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கமிறங்கிய ஜூனியர் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆதர்ஷ் சிங் -குல்கர்னி களமிறங்கினர். இதில் முதல் பந்திலேயே ஆதர்ஷ் சிங் கேட்ச் கொடுத்து ரன்கள் எதுவுமின்றி டக் அவுட் ஆனார். அடுத்து வந்த முசீர் கானும் 4 ரன்களில் ஆட்டமிழக்க, குல்கர்னி 12 ரன்னிலும், அடுத்து வந்த பிரியன்ஷு மோலியா 5 ரன்னிலும் அவுட் ஆகினர். ஒரு கட்டத்தில் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா அணி தடுமாறிய நிலையில், உதய் சஹாரன் மற்றும் சச்சின் தாஸ் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஒரு கட்டத்தில் இந்தியா அணி 203 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சச்சின் தாஸ் 93 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார், பிறகு வந்த அவினாஷ் ராவ் 11 ரன்களுக்கும், அவரை தொடர்ந்து வந்த முருகன் பெருமாள் அபிஷேக் ரன்கள் எதுவுமின்றி ரன் அவுட் ஆனார். இறுதி வரை போராடிய உதய் சஹாரன் 48.4 வது ஓவரில் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 48.5வது ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி, வெற்றி பெற்று, U19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.