"பாராளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு சிக்கல்.." விஸ்வரூபம் எடுக்கும் 2 பிரச்சனைகள்.! அரசியல் விமர்சகர்கள் கருத்து.!
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது . இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. விரைவிலேயே வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
மேலும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழகத்தில் இருக்கும் பாராளுமன்ற தொகுதிகளில் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ்வாறு திராவிட முன்னேற்ற கழகம் பாராளுமன்ற தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. மேலும் தேர்தல் கருத்துக்கணிப்புகளும் தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சாதகமாகவே வந்துள்ளது.
இந்நிலையில் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரேஷன் கார்டு தொடர்பான பிரச்சனைகள் திமுகவிற்கு தலைவலியை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் . உலக தரத்தில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதில் இருந்து பல்வேறு விதமான சர்ச்சைகள் இருந்து வருகிறது. அடிப்படை வசதிகள் இல்லை மற்றும் பேருந்து நிலையம் நகரில் இருந்து வெகு தூரத்தில் அமைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறை கூறி வருகின்றன. இது திமுக அரசிற்கு பாராளுமன்ற தேர்தலில் சற்று பின்னடைவாக அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரேஷன் கார்டு தொடர்பான பிரச்சனைகளும் திமுகவிற்கு பாராளுமன்றத் தேர்தலில் தலைவலியாக இருக்கலாம் என கருத்துக்கள் தெரிவிக்கின்றன. வெள்ள நிவாரண நிதி ரேஷன் கார்டு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்படவில்லை. மேலும் வெளியூர் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரேஷன் கார்டு மூலமாக மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்தவர்களில் பல லட்சம் பேருக்கு வழங்க வேண்டியிருக்கிறது .
இந்தப் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் உத்தரவுப்படி ரேஷன் கார்டில் பெயர் இணைத்துக் கொண்டவர்கள் அனைவரும் தங்களது கைரேகையை பதிவு செய்யும்படி உத்தரவு வந்தது. மேலும் கைரேகையை பதிவு செய்யாதவர்களுக்கு ரேஷன் பொருள் வழங்கப்படாது எனவும் அவர்களது பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்படுவதாகவும் வதந்திகள் பரவின. இது தொடர்பாக தமிழக அரசும் அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும் தமிழகத்தில் ஒரு கோடி மக்கள் கைரேகை பதிவு செய்ய வேண்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற மக்களிடம் பரவும் வதந்திகளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பாராளுமன்ற தேர்தலில் சிறிது பின்னடைவை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.