கள்ளக்குறிச்சி கோரம் | விசாரணையில் சிக்கிய மேலும் இருவர் - இதுவரை 12 பேர் கைது!!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளான சக்தி வேல் மற்றும் கண்ணனை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், கடுமையான வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. கிராமத்தில் 150க்கும் மேற்பட்டோர் இந்த விஷச்சாராயத்தை குடித்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து இன்று (ஜுன் 23) காலை நிலவரப்படி 57 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, உயர் போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தும், பணியிட மாற்றம் செய்தும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்விவகாரத்தில் முன்னதாகவே விஷ சாராயத்தை விற்பனை செய்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரின் மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இரண்டாம் தரகராக மெத்தனாலை சப்ளை செய்த சின்னத்துரை, ஜோசப் ராஜா, மதன்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விசாரணை செய்ததில் மாதேஷ் என்பவர்தான் தங்களுக்கு மெத்தனால் சப்ளை செய்பவர் என்ற தகவலை தெரிவித்தனர். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் மாதேஷிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், கச்சிராப்பாளையத்தில் ராமர் என்பவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
இந்தவகையில், 57 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாக விஷ சாராயத்திற்கு மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளி மாதேஷின் நண்பர்களான சக்திவேல் மற்றும் கண்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும் இவரின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற தொடர் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தவகையில், இதுவரை 12 பேரை இந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; கோபா அமெரிக்கா 2024 | 2-1 என்ற கணக்கில் ஈக்வடாரை வீழ்த்தியது வெனிசுலா!!