அதிரடி காட்டும் NIA..! -ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் இரண்டு பேர் கைது!
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேரை கொல்கத்தா அருகே தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது
பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் கடந்த மாதம் 1ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
விபத்து நடந்த உணவகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகேமரா பதிவுகளின் மூலம் சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டு, அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.
தற்போது, ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்த நபர் உள்பட வழக்கில் தொடர்புடைய இருவரை கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்த நபர் மற்றும் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபர் என இருவர், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா அருகே இன்று (ஏப்ரல் 12) கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்ட அப்துல் மதீன் அகமது தாஹா(வயது 30), உணவகத்தில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்த முசாவிர் ஹுசைன் ஷாசிப் (வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய புலனாய்வு அமைப்புகள், மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகா, கேரள மாநில காவல்துறை ஆகியோரின் துணையோடும், ஒத்துழைப்போடும் இவர்களை கைது செய்யும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், “இந்த இரண்டு முக்கிய குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்த பயங்கரவாத நெட்ஒர்க் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். இருப்பினும், இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம். அது விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.