"தமிழ்நாடு நாள்" த.வெ.க தலைவர் விஜய் போட்ட டுவிட்...! குஷியில் தொண்டர்கள்...!
தமிழ்நாடு நாள் முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நாள் (Tamilnadu Day) என்பது தமிழருக்கென்று தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையில் அதை இந்திய ஒன்றிய அரசு ஏற்க மறுத்து வந்தது. ஆனால் இக்கோரிக்கை முதலில் ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது. கலவரங்களும் ஏற்பட்டன. இதனால் இந்திய ஒன்றிய அரசு வேறு வழியின்றி 1 நவம்பர் 1956-இல் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது.
இதன்படி, சென்னை மாநிலத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் நிறுவப்பட்டன. சென்னை மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளும், திருவிதாங்கூரின் தமிழ் பகுதிகளும் இணைக்கப்பட்டு சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டது.
சென்னை மாநிலத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு 2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு ஆண்டுதோறும் நவம்பர் 1 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு நாள் முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் தனது வாழ்த்து செய்தியை பதிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; 1956இல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர் 1. மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதைத் தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராட்டம் நடத்திய எல்லைப் போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம். தியாகப் பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாகப் போற்றி மகிழ்வோம் என தெரிவித்துள்ளார்.