"TVK எது பண்ணாலும் ட்ரெண்டிங் ஆகுது."! நடிகர் விஜய் கட்சியின் உறுதிமொழி.!
கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய், தனது கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்று பெயரிடப்பட்ட அக்கட்சி தொடங்கப்பட்ட நாள் நாள்முதலே, பல சர்ச்சையில் சிக்கி வந்தது. சமீபத்தில் அவர் தனது கட்சியின் பெயரில் உள்ள ஒற்றுப் பிழையை திருத்தம் செய்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார்.
மேலும் 2024 இல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், 2026 இல் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் விரும்பும் ஆட்சி அமைப்பதே தனது இலக்கு என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில், சென்னை பனையூரில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை, உள்கட்சி கட்டமைப்பு போன்றவற்றை பற்றி ஆலோசிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். அந்த உறுதிமொழி, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தோழர்களின் உறுதிமொழி பின்வருமாறு:
“நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கின்றேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி அளிக்கின்றேன்”
English summary: Actor Vijay's political party TVK, hosted a meeting regarding the discussion of its various attributes. The members of TVK has taken a oath today which has become viral in social media.