’நான் வரும்போது தெரு விளக்குகளை ஆஃப் செய்றீங்க’..!! ’என்ன ஆக போகிறது பாருங்கள்’..!! திமுகவை எச்சரித்த ஜேபி நாட்டா..!!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரையில் கலந்துகொள்வதற்காக, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சென்னை வந்தார். அவரை பார்ப்பதற்காக கூடிய பாஜகவினரை போலீசார் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீஸாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், துறைமுகத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் ஜே.பி. நட்டா பேசுகையில், ”இந்தியாவிலேயே நான் பார்த்ததில் மிக மிக மோசமான ஆட்சி திமுகவின் ஆட்சி தான். திமுக தலைமைக்கு தலையில் ஒன்றுமே இல்லை. ஜனநாயகத்தின் மீது ஒரு துளியும் மதிப்பு இல்லாத ஆட்சியை திமுக நடத்தி வருகிறது.
நான் சென்னைக்கு வந்ததும் சில விஷயங்கள் உடனுக்குடன் நடந்தன. என்ன தெரியுமா? நான் போகும் இடங்களில் உள்ள மார்க்கெட்டுகளும், கடைகளும் அவசர அவசரமாக மூடப்பட்டன. தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன. பெரும் போலீஸ் படையே குவிக்கப்பட்டது. இதை பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது, இந்திராகாந்தியின் எமர்ஜென்சி காலக்கட்டம் தான். ஆனால் திமுகவுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஸ்டாலின் அவர்களே, உங்களை மக்கள் வெளியே தூக்கியெறியும் காலம் வெகுதொலைவில் இல்லை. நான் இங்கு பார்த்த காட்சிகள் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டன.
கடைக்காரர்களை போலீஸார் கட்டாயப்படுத்தி கடையை அடைக்க வைக்கின்றனர். இதுதான் தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் ஜனநாயகமா? இதுதான் திமுகவின் பாரம்பரியமா? இதுபோன்ற திமுக தலைவர்களை தமிழகத்தின் பிரதிநிதிகளாக டெல்லிக்கு வர விடலாமா? விடவே கூடாது. நான் வரும் போது தெரு விளக்குகளை தான் திமுக ஆஃப் செய்தது. ஆனால், மக்களோ திமுகவையே விரைவில் ஆஃப் செய்யப் போகிறார்கள். இவ்வாறு ஜே.பி. நட்டா கூறினார்.