டிரம்ப் VS கமலா ஹாரிஸ்!. இன்று அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு!. வாக்குச்சீட்டில் இடம்பெற்ற ஒரே இந்திய மொழி!
US Election: உலகின் மிகப்பெரிய வல்லரசாக திகழும் அமெரிக்காவை வழி நடத்தப் போவது டிரம்பா? அல்லது கமலா ஹாரிசா? யார் என்பதை அறிய மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த தேர்தல் 1845 ம் ஆண்டு முதலே நவம்பரின் முதல் செவ்வாய்கிழமை தேர்தல் நாளாக அறியப்பட்டு வருகிறது. நமது நாட்டைப்போல் இந்த தேர்தல் நாள் மாற்றதக்கது அல்ல. சமீப காலமாக தேர்தல் நாளுக்கு முன்னரே வாக்களிக்கும் வசதி வாக்காளர்களாகிய மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2020 தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்தவர் எண்ணிக்கை 64% ஆக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்தநிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுடன் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கி உள்ளார் . ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய -ஜமாய்க்கா வமிசாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்த தேர்தல் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க சமூகத்தை பிளவு படுத்தும் (most divisive and most polarising election) தேர்தலாக வருணிக்கப்படுகிறது.
புதிதாக வரும் அதிபர், உக்ரைன் போரை, மத்திய கிழக்கில் இஸ்ரேல், பாலத்தீனர்களுக்கெதிராக தொடுத்திருக்கும் மனிதப் படுகொலையை நிறுத்துவாரா? அல்லது இந்த உலகை மூன்றாவது உலகப்போருக்கு இட்டுச்செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், இந்த தேர்தலில் அமெரிக்க மக்களின்முன் உள்ள பிரச்சினைகள் என்ன , எதிர்பார்ப்புகள் என்ன, என்பதை உற்று நோக்கினால் அவர்கள் யாரை தேர்வு செய்வார்கள் என்பதை அறிய முடியும். இதுவரை ஒற்றை வல்லரசாக வலம்வந்த அமெரிக்கா இன்று சீனத்தின் எழுச்சியை கண்டு அஞ்சுகிறது, அமெரிக்க நாணயமான டாலரின் ஆதிக்கம் உலகச் சந்தையில் குறைந்து வருவதும், உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக சீனா வளர்ந்துவிட்டதும், தொழில்நுட்பத்தில், ராணுவ வலிமையில் சீனம் அமெரிக்காவிற்கு இணையாக வளர்ந்து இருப்பதும் , அந்நாடு ரஷ்ய நாட்டுடன் நட்புறவாக இருப்பதும், அமெரிக்காவின் ‘தலைமைக்கு’(வல்லரசு தன்மைக்கு ) விடப்பட்ட சவாலாக அமைந்துள்ளன.
கடந்த சில மாதங்களாக அதிபர் தேர்தலுக்கான பிரசாரங்கள் களைகட்டின. இதில் கமலா, டிரம்ப் இருவருக்குமே ஆதரவுகள் குவிந்தன. இதனால், கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையே அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கான போட்டி காணப்படுகிறது. யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியாத நிலையில் இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அமெரிக்காவில் அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க மாட்டார்கள். தங்கள் மாகாண பிரதிநிதிகளுக்கு வாக்களித்து தேர்வு செய்வதன் மூலம் அதிபர் தேர்வு செய்யப்படுவார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட், பிரதிநிதிகள் அவை என இரு அவைகள் உள்ளன. இதில் மேலவையான செனட்டில் 100 எம்பிக்களும், பிரதிநிதிகள் அவையில் 435 எம்பிக்களும் இருப்பார்கள். இதுதவிர, தலைநகர் வாஷிங்டனுக்கு தனியாக 3 எம்பிக்கள் இருப்பார்கள். மொத்தமுள்ள 50 மாகாணங்களில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் தலா 2 செனட்கள் இருப்பார்கள். ஒவ்வொரு மாகாணத்திற்கும் அங்குள்ள மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதிகள் எண்ணிக்கை இருக்கும்.
இந்த 538 இடங்களும் எலக்ட்ரால் காலேஜ் ஓட்டுகள் என குறிப்பிடப்படும். இதில் 270க்கும் மேற்பட்ட ஓட்டுகளை பெறும் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 17ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் தங்களின் மாகாண தலைநகரில் கூடி அதிபரை தேர்ந்தெடுப்பார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய அதிபருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து 2025, ஜனவரி 20ம் தேதி புதிய அதிபர் பதவியேற்பார்.
பொதுவாக அதிபர் தேர்தலில் பென்சில்வேனியா, நிவாடா, வட கரோலினா, ஜார்ஜியா, அரிசோனா, மிச்சிகன், விஸ்கான்சின் ஆகிய 7 மாகாணங்களே வெற்றியை தீர்மானிப்பதாக உள்ளன. இதனால் உச்சகட்ட போட்டி நிலவும் இம்மாநிலங்களில் டிரம்ப், கமலா ஹாரிஸ் இறுதிகட்டமாக தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 18.65 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 7.7 கோடி பேர் ஏற்கனவே தபால் மூலமாகவும், நேரடியாகவும் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர். தேர்தல் நடக்கும் இன்றைய நாளில் மக்கள் கட்டாயம் நேரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டும்.
அமெரிக்க நேரப்படி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும். அங்கு மாகாணங்களுக்கு இடையே நேர வித்தியாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வாக்குப்பதிவு தொடங்கும் நேர சில மாகாணங்களில் வேறுபடும். இந்திய நேரப்படி பார்த்தால், இன்று மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நாளை அதிகாலை 5.30 மணி முதல் காலை 9.30 மணிக்குள் முடிவடையும்.
அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். இதில் கடும் போட்டி நிலவும் 7 மாகாணங்களில் முடிவுகள் வெளியாக அதிக நேரமாகலாம் என கூறப்படுகிறது. அனைத்து மாகாணத்திலும் எந்த சிக்கலும் இன்றி முடிவுகள் விரைவாக வெளியாகும் பட்சத்தில் இந்திய நேரப்படி நாளை மாலைக்குள் புதிய அதிபர் யார் என்பது தெரிந்து விடும். கடந்த 2020 தேர்தலில் 4 நாட்களுக்குப் பிறகே முடிவுகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நியூயார்க் மாகாண வாக்குச்சீட்டுகளில் பெங்காலி மொழி இடம்பெற்றுள்ளது. அம்மாகாண வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்ற ஒரே இந்திய மொழியும் பெங்காலி தான். அம்மொழி பேசும் வாக்காளர்களுக்காக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆங்கிலம், தவிர்த்து மொத்தம் 4 மாற்று மொழிகள் வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்றுள்ளன.
Readmore: தட்டையான வயிறு வேண்டுமா..? அப்படினா தினமும் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிங்க..!!