41 தொழிலாளர்களை மீட்பதில் மீண்டும் பின்னடைவு!... 3வது முறையாக மீட்புப்பணி நிறுத்தம்!… இன்னும் 14 மணிநேரம் வரை ஆகலாம்?
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி மீண்டும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கடந்த 12ம் தேதி திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி இன்றுடன்11 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் 200 மீட்டர் இடைவெளியில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக் கொண்டனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த சுரங்கத்தில் ஏற்கனவே இருந்த 6 அங்குல பைப் சேதமடையாமல் இருந்ததால், அதன் வழியாக வாக்கி டாக்கியை அனுப்பி அவர்கள் உயிருடன் இருப்பதை மீட்புக் குழுவினர் உறுதி செய்தனர். தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக, உடனடியாக, குழாய் வழியாக ஆக்சிஜன், உணவு, மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டன. சாதாரண உணவுகளை சாப்பிட்டால், இயற்கை உபாதைகளை கழிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், விண்வெளி வீரர்களுக்கான உணவு முறைகளே பின்பற்றப்பட்டு வருகின்றன.
தொழிலாளர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க மாத்திரைகளும் வழங்கப்பட்டன. சுரங்கத்தில் 57 மீட்டர் தூரத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதை கண்டறிந்த அதிகாரிகள் எளிதாக மீட்டுவிடலாம் என நினைத்திருந்த நிலையில், ஒவ்வொரு நகர்வும் கடும் சவாலாக மாறியது. இதனால், மீட்புப் பணிகளை மேற்கொள்ள அமெரிக்காவில் இருந்து நவீன துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
சுரங்கப்பாதை விபத்து ஏற்பட்டு, 10 நாட்களுக்குப் பிறகு தொழிலாளர்கள் நலமாக இருக்கும் வீடியோ வெளியாகி, அவர்களின் உறவினர்களுக்கு சற்று நிம்மதி அளித்தது. எனினும், மீட்புப் பணியில் சிக்கல் நீடித்துக் கொண்டே செல்கிறது. மொத்தம் உள்ள 57 மீட்டரில் 46 மீட்டர் தொலைவுக்கு துளையிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் சில மணி நேரங்களில் துளையிடும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. மீட்கப்படும் தொழிலாளர்கள் வெளியே வர வசதியாக, அந்த இடம் வரை கனமான குழாய்கள் இடிபாடுகளுக்கு இடையே இணைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக உத்தர்காசியில் 41 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் 41 பேரும் இன்றைக்குள் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அதிகரித்தது. மீட்புக் குழுவினர் கிடைமட்டமாக ஆகர் இயந்திரத்தை கொண்டு துளையிட்டு உள்ளே நகர்ந்து கொண்டிருந்தனர். இதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆகர் இயந்திரம் பொருத்தப்பட்ட கான்கிரீட் தளம் திடீரென சேதமடைந்தது. இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் ஆகர் இயந்திரம் துளையிடும்போது இரும்பு கர்டர் குறுக்கிட்டதால் அதனை வெட்டுவதற்கு ஆறு மணி நேரம் தாமதம் ஆனது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 12ஆம் தேதி மீட்புப் பணி தொடங்கியதில் இருந்து துளையிடும் பயிற்சி நிறுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஆகர் இயந்திர கான்கிரீட் தள சேதங்களை சரிசெய்து மீண்டும் பணிகளை தொடங்க அடுத்த 14 மணி நேரம் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது.