பாராளுமன்ற தேர்தல் 2024: "தனித்துப் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ்.." மம்தா பானர்ஜி அதிரடி.!
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பாசிச அரசை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது.
இந்தக் கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் ஆம் ஆத்மி ராஷ்ட்ரிய ஜனதா தளம் திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. மேலும் இந்தியா கூட்டணியின் தொகுதிகள் பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் " திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் நீடிக்கிறது. எனினும் மேற்குவங்க மாநிலத்தில் தனித்துப் போட்டியிட முடிவு செய்து இருக்கிறது. மேற்குவங்க மாநில பாராளுமன்ற தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு ஏற்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் தங்களது கட்சி தனித்துப் போட்டியிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியை தனியாக வீழ்த்தும் வலிமை எங்களுக்கு இருக்கிறது என தெரிவித்த மம்தா பானர்ஜி பாரத் ஜோதா யாத்திரையின் போது ராகுல் காந்தி தங்களிடம் தெரிவிக்காதது பற்றி வருத்தம் தெரிவித்திருக்கிறார். மரியாதை நிமித்தமாக எனது யாத்திரை மேற்குவங்க மாநிலத்திற்கு வருகிறது என அவர் தெரிவித்திருக்கலாம் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி தனக்கு நெருக்கமான தலைவர் என ராகுல் காந்தி தெரிவித்திருந்த நிலையிலும் அவரது நடவடிக்கை மம்தா பானர்ஜிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.