2-வது முறையாக திருச்சி சூர்யா தமிழக பாஜகவில் இருந்து நீக்கம்...!
திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக திருச்சி சூர்யா; தமிழிசை சௌந்தரராஜன் தனிப்பட்ட முறையில் என் மீது பாசம் கொண்டவர். அவரை திமுகவினர் உருவ கேலி செய்த போது அவருக்கு கோபம் வந்தது. ஆனால் அண்ணாமலையின் புகைப்படத்தை ஒட்டி அதனை திமுகவினர் கேலி செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியுடன் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன்.
தற்போது கட்சியில் இருப்பவர்கள் மீது எந்தவித குற்றப் பின்னணியும் இல்லை, அப்படி இருந்தாலும் அது முன்பு இருந்த தலைவர்களால் தான் இருக்கும். ஆனால் சம்பந்தமில்லாமல் எங்கள் தலைவரை குற்றம் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததால் தான் அப்படி பதிவிட்டேன். வருகின்ற 2027 வரை அண்ணாமலை தான் மாநிலத் தலைவராக தொடர்வார். 2026இல் முதலமைச்சர் ஆவார்" என அண்ணாமலைக்கு ஆதரவாக பேசிய இருந்தார். இந்த நிலையில் திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக வெளியிட்ட அறிக்கையில்; இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது . கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக, 2வது முறையாக தமிழக பாஜக நீக்கம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.