இமாலய வெற்றியை நோக்கி…! வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார் மோடி..! வாரணாசி தொகுதியும்…, பிரதமர் மோடியும்…!
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி மே 14ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தற்போது வரை 2 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன.இந்த நிலையில் பிரதமர் மோடி போட்டியிடும் உத்தரப்பிரதேசம் வாரணாசி மக்களவை தொகுதியில் இறுதி கட்டமாக ஜூன் 1ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் போட்டியிடுகிறார்.இந்த நிலையில் வாரணாசியில் மே 13ஆம் தேதி பிரதமர் மோடி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து மே 14ஆம் தேதி வாரணாசி தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.
வாரணாசி தொகுதியும்…பிரதமர் மோடியும்… வாரணாசி தொகுதி 1952 முதல் 1962 வரை காங்கிரஸ் வசம் இருந்தது. 1967-ல் சிபிஎம் கட்சி வென்றது. 1971-ல் காங்கிரஸ், 1977-ல் ஜனதா கட்சி, 1980, 1984-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.இதன்பின்னர் 1989 தேர்தலில் ஜனதா தளம் வெற்றி பெற்றது. 1991 முதல் 1999-ம் ஆண்டு வரையிலான 4 தேர்தல்களில் பாஜக தொடர்ச்சியாக வாரணாசியில் வெற்றி வாகை சூடியது. 2004-ம் ஆண்டு காங்கிரஸின் ராஜேஷ் குமார் மிஸ்ரா இத்தொகுதியில் வென்றார்.
2009-ம் ஆண்டு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி வெற்றி பெற்றார். 2014-ல் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வென்று நாட்டின் பிரதமரானார். 2019-ம் ஆண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமரானார். தற்போது 3-வது முறையாக வாரணாசியில் மீண்டும் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி.வாரணாசி தொகுதியில், 2019-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி 479,505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More: சவுக்கு சங்கர் கைது ; “பத்திரிக்கை சுதந்திரத்தை காலில் மிதிக்கும் திமுக அரசு” – சசிகலா ஆவேசம்!