சற்றுநேரத்தில்!... தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம்!… 110 நாட்களுக்கு பின் பொதுவெளியில் வரும் விஜயகாந்த்!… அதிகாலையிலேயே குவிந்த தொண்டர்கள்!
தேமுதிக நிறுவனரான விஜயகாந்த் தலைமையில், இன்று அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 110 நாட்களுக்கு பின் பொதுவெளியில் வரும் கட்சித் தலைவரை பார்க்க அதிகாலையிலேயே தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி அன்று தனது 71வது பிறந்தநாளை ஒட்டி, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். அதன்பிறகு எந்தவொரு பொதுநிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்காமல் இருந்தார். உடல்நிலை காரணமாக அவர் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்தார். இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 20 நாட்களுக்கும் மேலான தொடர் சிகிச்சைக்குப் பிறகு விஜயகாந்த் அண்மையில் தான் வீடு திரும்பினார். இந்நிலையில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் திருமண மண்டபத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை 8.45 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், 110 நாட்களுக்குப் பிறகு கட்சியின் முக்கியமான நிகழ்ச்சியில் அவர் இன்று பங்கேற்க உள்ளார்.
மேலும் கழக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் வகுப்பது, மாவட்டச் செயலாளர் கூட்டங்கள் நடத்துவது, மாநாடு நடத்துவது குறித்து திட்டங்கள் தீட்டுவது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது குறித்து விவாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, தேமுதிக பொருளாளராக உள்ள பிரேமலதாவிற்கு கூடுதல் பொறுப்பு வழங்குவது குறித்தும், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என கருதப்படுகிறது.