இன்றே கடைசி நாள்!… ரூ.1000, பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளுங்கள்!
நாளை மற்றும் நாளை மறுதினம் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்பதால் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்காதவர்கள் இன்றே ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கும் பணியை கடந்த 10ம் தேதி காலை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தார்.
மொத்தம் 2 கோடியே 19 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களில் ஒருவர் கூட விடுபடாமல் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன் பெற்றவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 ரொக்கம் 10ம் தேதி முதல் நேற்று வரை வழங்கப்பட்டது. டோக்கன் வழங்கப்படாதவர்கள் மற்றும் அரிசி அட்டைதாரர்கள் விடுபட்டு இருந்தால் 14ம் தேதி (இன்று) வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அவர்கள் ரூ.1000 ரொக்கம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றை இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்பதால், பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்காதவர்கள் இன்றே ரேஷன் கடைக்கு சென்று மறக்காமல் பெற்றுக்கொள்ளுங்கள்.