இன்று ஐப்பசி மாத பௌர்ணமி..!! சிவலிங்கத்திற்கு சாத்தப்படும் அன்னத்தை சாப்பிட்டால் கோடி புண்ணியம்..!!
ஐப்பசி மாதத்தின் பௌர்ணமியை முன்னிட்டு இன்றைய தினம் அனைத்து சிவாலயங்களிலும் சிவலிங்கங்களுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தை நேரில் பார்த்தால், கோடி புண்ணியம் என்பார்கள். அது போல் இந்த அன்னாபிஷேகத்தில் கொடுக்கப்படும் அன்னத்தை வாங்கி சாப்பிட்டால், வேண்டுதல் நிறைவேறும்.
ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை மாதம் பிறந்தால் ஐயப்ப பக்தர்கள் விரதம், திருக்கார்த்திகை தீபம், மார்கழி மாதம் வந்துவிட்டால் வைகுண்ட ஏகாதசி உள்ளிட்டவை அடுத்தடுத்து நடைபெறும். அந்த வகையில், ஐப்பசி அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமானது. மாதந்தோறும் பௌர்ணமி வந்தாலும், சித்ரா பவுர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிவன் கோயில்களில் தினந்தோறும் 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை ஐப்பசி மாத பௌர்ணமி அன்று நடக்கும் அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமானது. கோடி சிவலிங்கங்களை பார்த்த புண்ணியம் கிடைக்கும். இந்தாண்டு ஐப்பசி அன்னாபிஷேகம் நவம்பர் 15ஆம் தேதி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
அதாவது இன்றுதான் பௌர்ணமி. இன்றுடன் ஐப்பசி மாதம் முடிந்து நாளை கார்த்திகை மாதம் தொடங்குகிறது. இன்றைய தினம் அதிகாலை 3.53 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 3.42 மணி வரை பௌர்ணமி திதி உள்ளது. இந்த பவுர்ணமி தினத்தன்று அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரங்களும் இணைந்து வருகிறது. இது போன்ற சிறப்பான நாளில் சிவன் கோயில்களில் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
லிங்கம் முழுவதும் அன்னம் சாத்தப்பட்டிருக்கும். இந்த அன்னத்தை சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சந்திர பகவானின் சாபம் நீங்கப்பட்ட நாளும் ஐப்பசி மாத பௌர்ணமி தான். இந்த நாளில்தான் சந்திரனுக்குரிய தானியமான அரிசியில் சிவனுக்கு அன்னமிட்டு அபிஷேகம் செய்தால், சந்திரனால் ஏற்படும் பாதிப்புகளும் நீங்கும். அன்னாபிஷேகத்திற்கு அரிசி வாங்கிக் கொடுத்தால் நம் வீட்டில் உணவு தட்டுப்பாடு இருக்காது.
Read More : 2026இல் CM..!! போட்டியிடும் தொகுதியை உறுதி செய்த விஜய்..? அனல் பறக்கும் அரசியல் களம்..!!