இன்று கார்த்திகை தீபம் ஏற்றும் நாள்!… விளக்கு ஏற்றுவது வெறும் வழிபாடு மட்டுமல்ல!… இப்படியொரு வரலாறு இருக்கா?
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில், இன்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நாள். அந்த திருக்கார்த்திகை தீபத்தைப் பார்த்து விட்டுத்தான் அவரவர்கள் வீட்டில் தீபம் ஏற்றுவார்கள். கார்த்திகை தீபத் திருவிழாயொட்டி அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் (பரணி தீபத் திருவிழா) ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது, மாலையில் ஆறு மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் – பஞ்சமூர்த்திகள் தரிசனம், அர்த்தநாரீஸ்வரர் அலங்கார தரிசனம் மற்றும் மகாதீபம் (மகா ஜோதி தரிசனம்) ஏற்றப்படும்.
அருணாசலேஸ்வரர் மலை உச்சியில் அக்னி வடிவில் காட்சி தருவார். தீப மங்கள ஜோதி நமோ நம என்று இறைவன் ஜோதி வடிவாக இருப்பதாக ஆன்றோர்கள் கூறுகின்றார்கள். வையம் வாழ வந்த வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்றார். அந்த அருட்பெருஞ்ஜோதி தான் ஆன்மிக ஜோதியாக திருவண்ணாமலையில் ஏற்றப்படுகின்றது.
திருக்கோவில் வழிபாட்டில் விளக்குகள் முக்கிய இடம்பெறுகின்றன. திருக்கோவில்களில் ஏற்றப்படும் விளக்குகள் பல வகைப்படும். நாக தீபம், அன்னதீபம், மேருதீபம், நட்சத்திர தீபம், பூரண கும்ப தீபம் உள்ளிட்டவை மிகப் பிரபலமானவை. அவை மாலை நேர சந்தி வழிபாட்டில் காண்பிக்கப்படுவதை பார்த்திருப்போம். இவை தவிர திருக்கோவில்களில் பலவிதமான விளக்குகள் ஏற்றப்பட்டன. அவற்றில் நந்தா விளக்கு மற்றும் சந்தி விளக்கு போன்றவை சிறப்பாக குறிப்பிடப்படுகின்றன. நந்தா விளக்கு என்பது இறைவன் அருகில் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும். சந்தி விளக்கு என்பது காலை, மாலை வழிபாட்டு நேரங்களில் மட்டுமே ஏற்றப்படும் விளக்கு. இந்த விளக்குகளை தொடர்ந்து எரிக்க வேண்டுமே எப்படி? அதற்கான எண்ணெயும் நெய்யும் எங்கிருந்து கிடைக்கும்.?
இதற்காக நம் மன்னர்கள் பலவித நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். நெய்க்காக ஆடு, மாடு, எருமை போன்றவற்றை தானமாக அளித்து அவற்றிலிருந்து நெய் அளிக்க வேண்டும் என கட்டளை இட்டுள்ளனர். ஆடு, மாடுகளை மேய்க்க நிலமும் தானமாக அளித்துள்ளனர். இந்த நிலத்திற்கு 'திருவிளக்கு புறம்' என்றே பெயரிட்டனர். நிலத்தையும் கால்நடைகளையும் பராமரித்து திருவிளக்குக்கான நெய் அளித்தோரை, 'திருவிளக்கு குடிகள்' என்றும் கோவில் மன்றாடிகள்' என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கருவறையின் நுழைவு வாயிலில் ஏற்றப்படும் ஏற்றப்படும் விளக்கு, 'சரவிளக்கு அல்லது தீப மாலை' என்று அழைக்கப்பட்டது.
இறைவன் முன் குத்துவிளக்குகளும் ஏற்றப்பட்டன. இது மூன்று நிலை, ஐந்து நிலை உடையதாக விளங்கியது. திருவாரூர் கோவிலில் சோழ மன்னன் ராஜேந்திர சோழனும் அவனது அன்பு காதலியுமான பறவை நங்கையாரும் நின்று இறைவனை வணங்கிய இடத்தில், குத்துவிளக்கு ஒன்றை ஏற்றி வைக்க நடவடிக்கை எடுத்தான். மேலும் இக்கோவிலுக்கு 28 குத்துவிளக்குகளையும் தானம் அளித்தான் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. திருவரங்கம் கோவிலில் கற்பூர விளக்கு என்ற விளக்கு ஏற்றப்பட்டது விளக்கில் திரி போடப்பட்டு நெய் மற்றும் பீமசேனி கற்பூரம் என்ற கற்பூரமும் சேர்க்கப்பட்டு கற்பூர விளக்கு ஏற்றப்பட்டது என்று அறிகிறோம்.
திருவையாறு கோவிலுக்கு ஈழச்சியல் விளக்கு, மலையால்சியல் விளக்கு சோழச்சியல் விளக்கு, ஆர்க்குட விளக்கு போன்ற விளக்குகளை ராஜராஜ சோழனின் மனைவி லோகமாதேவி தானமாக அளித்தார். திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் காணப்படும் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டின் வாயிலாக இரும்பு உள்ளீட்டுடன் கூடிய பித்தளை விளக்கு அளிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இதனால் விளக்குகள் எத்தகைய உலோகங்களால் செய்யப்பட்டு அளிக்கப்பட்டன என்பதையும் உணர முடிகிறது..
விளக்குகளில் கலை அழகுடன் காட்சி தரும் பாவை விளக்குகளையும் கோவில்களில் காணலாம். அழகிய பெண் ஒருத்தி தன் கைகளில் அகல் விளக்கை ஏந்திய நிலையில் காணப்படும் விளக்கினை பாவை விளக்கு என கூறுவர். இதை தீபலட்சுமி, தீப நாச்சியார், திருவிளக்கு நாச்சியார் என்றெல்லாம் அழைப்பர். தன் வேண்டுதல் நிறைவேறவும் நிறைவேறியதற்கு நன்றியாகவும் எப்பொழுதும் கோவிலில் தீப சேவை செய்து கொண்டு இருப்பதாக அவ்வாறு பாவை விளக்குகள் அமைக்கப்பட்டன என்பதை அறிய முடிகிறது.
விளக்குகளை எரிக்க எண்ணெய் வேண்டுமே இதற்கு இலுப்பை எண்ணெய் மிகச்சிறந்தது. எனவே கோவிலுக்கு அருகில் இலுப்பை மரங்கள் அடங்கிய தோப்பை அமைத்து தந்தனர். மயிலாடுதுறை அருகே உள்ள பழமண்ணிப்படிக்கரை என்ற தளம், இலுப்பை பட்டு என்றே அழைக்கப்படுகிறது. செங்கல்பட்டு அருகே உள்ள திருவிடை சாரம் ஞானபுரீஸ்வரர் கோவிலில் காணப்படும் விக்கிரம சோழன் கல்வெட்டில், இக்கோவிலில் நந்தா விளக்கு எரிப்பதற்காக திருத்தப்படாமல், பயன்பாடு இல்லாமல் இருந்த நிலம் அளிக்கப்பட்டு, அதை திருத்தி அதிலிருந்து வந்த வருவாயை திருவிளக்குக்காக செலவழிக்கப்பட்டதை கூறுகிறது.
சோழ மன்னன் உத்தமசோழனின் மகனான மதுராந்தகம் கண்டராதித்தன் திருவல்லம் கோவிலுக்கு சென்றான். அவன், இறைவனுக்கு படைக்கப்படும் அமுது அளவு குறைந்து இருப்பதையும் எண்ணெயின்றி விளக்கு ஒளி குறைந்து இருப்பதையும் எண்ணெயின்றி விளக்கு ஒளி குறைந்து இருப்பதையும் கண்டு விசாரித்து தண்டித்ததாகவும் கூறுகிறது. இது போன்ற ஏராளமான கல்வெட்டுகளின் வழியாக விளக்கு ஏற்றுவது வெறும் வழிபாடாக மட்டுமில்லாமல் வேலை வாய்ப்பு, நில மேம்பாடு, கலை வளர்ச்சி, தொழில் நுட்பம் என பலவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அந்த காலத்தில் இருந்துள்ளது.