வரிகளால் என்றும் வாழும் கவிஞர் வாலி பிறந்தநாள் இன்று!… எழுத்துக்களால் சிகரம் தொட்டவரின் சில வெற்றி வரிகள் இதோ!
வாலியின் தெய்வீக வரிகளுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. காதல், ஊடல், காமம், சோகம், மகிழ்ச்சி, ஏக்கம் என அனைத்துக்கும் உயிர் தந்து அழகுக்கு அழகு சேர்த்து பாடலில் புகுத்தி உருகவைத்துவிடுவார். பல ஆயிரம் பாடல்கள் எழுதிய வாலி, இலக்கிய உலகிலும், இசை உலகிலும் ஈடு இணையற்று கம்பீரமாய் உயர்ந்து நிற்கிறார். அவரின் பாடல் வரியில் மனதை தொட்ட சில பாடல்கள் இங்கே நினைவுக்கூறுவோம்.
கவிஞர் வாலியின் இயற்பெயர், டி.எஸ்.ரங்கராஜன். 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். பத்தாம் வகுப்பு படித்துள்ள வாலி,சென்னை ஓவியக் கல்லூரியில் ஒரு வருடம் படித்தார். எழுத்தாளராக ஆசைப்பட்ட வாலி, நண்பர்களுடன் சேர்ந்து, நேதாஜி'என்ற கையெழுத்து பத்திரிகையை தொடங்கினார். பின்னர் , திருச்சி வானொலிக்கு கதைகள், நாடகங்கள் எழுதினார். பாடலாசிரியர் ஆகவேண்டும் என்ற இவரது கனவு பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு 1958ம் ஆண்டு நனவானது. அழகர் மலை கள்வன் படத்தில், நிலவும் தரையும் நீயம்மா என்ற பாடலை முதல் முதலாக வாலி எழுதி பாடல் ஆசிரியர் ஆனார். இந்த பாடலுக்கு டி.கோபாலன் இசையமைக்க பி.சுசிலா பாடினார். இதன் பிறகு, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ரஜினி, கமல்,விஜய்,அஜித், தனுஷ்,சிம்பு என இன்றைய இளைய முன்னணி கதாநாயகர் வரை அனைவரின் படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார்.
கவிஞர் வாலியின் முதல் பாடல் பின்னணிப் பாடகர் சவுந்தரராசன் பாடி பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த பக்திப் பாடல். அந்தப் பாடல் அவரை பாராட்டு மழையில் நனைய வைத்தது. கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்.. கந்தனே உனை மறவேன்? டி.எம்.சௌந்தரராஜனின் கம்பீரமான குரலில் இந்த பாடலை எப்போது கேட்டாலும் மனதிற்குள் ஓர் புத்துணர்ச்சி பிறக்கும். இந்தபாடல் வாலியின் வரியழகில் அனைவரையும் பக்திபரவசத்தில் ஆழ்த்தியது. 1968ம் ஆண்டு வெளியான குடியிருந்த கோயில் படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இந்தப் படம் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட்டடித்தது.அதில் உன் விழியும்..என் வாலும் சந்தித்தால் என்ற ரொமான்டிக் பாடலும்,என்னைத் தெரியுமா ?.. நீயேதான் எனக்கு மணவாட்டி என ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு வெரைட்டி கொடுத்திருப்பார்.
ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்தில் குழந்தையை பிரிந்து பரிதவிக்கும் தாயின் ஏக்கத்தை வரிகளால், வலிகளை கோர்த்து கொடுத்து இருப்பார். சின்னத்தாயவள் தந்த ராசாவே என பாடல் தொடங்கியதுமே மனசுக்குள் ஏதோ ஓர் உணர்வு புகுந்து நம்மை ஆண்கொள்ளும். அதுமட்டுமா, அம்மா என்றழைக்காத உயிரில்லையே.. காலையில் தினமும் கண் விழித்தால் என தாயை நினைத்து உருக வைத்த கவிஞன்.கண்ணன் ஒரு கைக்குழந்தை, ராசாவே உன்ன நான் எண்ணித்தான் போன்ற பல பாடல்கள் வாலி-இளையராஜா கூட்டணியில் திரை இசையில் அருதிப் பெரும்பான்மை பெற வைத்தன.
ரகுமானுக்காக வாலி முதன் முதலில் இயக்குனர் சங்கர் அறிமுகமான ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே என்னும் பாடலை எழுதியிருந்தார். மற்ற அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருந்தாலும் வாலியின் இந்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இது அன்றை நாகரிகத்தின் பிரதிபலிப்பாகவும் ஆங்கில வார்த்தைகளின் நியாயமான பங்கையும் பெற்றது. பின்னர் 'முக்காலா முக்காபுலா'' அவர்களின் மிகவும் பிரபலமான ஒத்துழைப்பாக இருந்தது. பிரபுதேவாவின் காதலன் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் ஆங்கில வார்த்தைகளின் தாராளமான நடமாட்டத்தில் உருவானது. ஆழமான காதல் வார்த்தைகள் வரை வேடிக்கையான வாலியின் பாடல் வரிகள் சங்கரின் படத்திற்கு சரியாக பொருந்தியது. அது பாலிவுட்டிலும் மிகப்பெரிய வெற்றியை கண்டது.
இன்றளவும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த காதல் தேசம் படத்தின் முஸ்தபா முஸ்தபா பாடலை வாலி தான் எழுதி இருந்தார். 90களின் நட்பு கீதம் என பாராட்டப்படும் இந்த பாடல் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் மனதை தொட்ட பாடலாக உள்ளது. கல்லூரி நாட்களில் ஏற்பட்ட நட்பு குறித்த ஆழமான வரிகள் பிரியாவிடை விழாவில் இன்றளவும் இடம்பெறக்கூடிய பாடலாக உள்ளது.
காதலர்களுக்கு மிகவும் பிடித்த "முன்பே வா" என்னும் பாடலை வாலி தான் எழுதியிருந்தார். ரகுமான்- வாலி ஜோடி காதல் தட்டில் இனிமையான விருந்தை படைத்தனர். சில்லுனு ஒரு காதல் படத்தின் பாடல் மனதை தொட்ட ஒன்றாக அமைந்தது. நிலாவிடம் வாடகை வாங்கி/ விழி வீட்டில் குடி வைக்கலாமா? போன்ற வரிகள் காலத்திலும் அழியா படிமங்களை உருவாக்கியது. அழகிய தமிழ் மகன் பாடலில் அவர் எழுதிய "எல்லாப் புகழும்" என்னும் பாடல் சிறந்த ஒன்றாக அமைந்தது. ரஹ்மான்- வாலி கூட்டணியில் ஒரு மேஜிக்கை ஏற்படுத்தியிருந்தது. இந்த பாடல் "உன்னால் முடியும் "என்ற வாசகம் தளபதியின் ரசிகர்கள் சங்கத்தின் டேக் லைனாக மாறியது.
எஜமான், காதலன், ராஜாவின் பார்வையிலே, இந்தியன், காதலர் தினம், ஹே ராம், பிரியமானவளே, மின்னலே, மௌனம் பேசியதே, கஜினி, சந்திரமுகி, வல்லவன், 'சிவாஜி, சென்னை 600028, தசாவதாரம், நாடோடிகள், நான் கடவுள், கோவா, அயன், மங்காத்தா, எதிர்நீச்சல் போன்ற எண்ணற்ற திரைப்படங்களுக்குப் பாடல் எழுதியுள்ளார் கவிஞர் வாலி. எழுத்தில் இருந்த வேகம் - இசையில் இருந்த ஞானம் - சொற்களில் இருந்த எளிமை - சொல்லில் இருந்த புதுமை… இவைதான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோடம்பாக்கத்தில் வாலி தன் பாட்டுக் கொடியை பறக்கவிட்டதற்கான காரணம் ஆகும். மனதைவிட்டு பிரியாத வரிகளை தந்த கவிஞர் வாலி கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி மண்ணைவிட்டு மறைந்தார். காலத்தால் அழியாத பல பாடல்களை தந்த காவிய நாயகனின் பாடல்கள் காலம் கடந்தும் பேசும்.