இந்திய அணியின் மும்மூர்த்திகளுக்கு இன்று பிறந்த நாள்!
இந்திய கிரிக்கெட் அணியின் தூண்களான ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஷ்ரேயஸ் ஐயருக்கு இன்று பிறந்த நாள். சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் வீரர்கள் இவர்கள். இந்திய கிரிக்கெட் அணியின் அசத்தல் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்துவார். 2008 இல் நடைபெற்ற ஐபிஎல் தொடர் மூலம் இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்.
குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள நவகம் கெட் நகரில் குஜராத்தி ராஜ்புத் இந்து குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை அனிருத் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியில் வாட்ச்மேனாக இருந்தார். அவர் ஒரு ராணுவ அதிகாரியாக வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார், ஆனால் கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தது, சிறுவயதில் தந்தைக்கு பயமாக இருந்தது. அவரது தாயார் லதா 2005 இல் ஒரு விபத்தில் இறந்தார் மற்றும் அவரது தாயின் மரணத்தின் அதிர்ச்சி அவரை கிரிக்கெட்டிலிருந்து கிட்டத்தட்ட விலகச் செய்தது. அவரது சகோதரி நைனா ஒரு செவிலியர். ஜாம்நகரில் வசிக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் வீரரான, அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணியை அனைத்து வடிவங்களிலும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் ஒரு ஆல்-ரவுண்டர் ஆவார், அவர் இடது கையால் பேட் செய்கிறார் மற்றும் இடது கை ஆர்த்தடாக்ஸ் ஸ்பின் பந்துகளை வீசுகிறார். கடந்த தசாப்தத்தின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக ஜடேஜா கருதப்படுகிறார், 2021 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை எடுத்த ஐந்தாவது இந்திய மற்றும் ஐந்தாவது-வேகமான வீரர் ஆனார்.
ஜடேஜா 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர். பைனலில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். அவர் முதல்தர கிரிக்கெட்டில் சவுராஷ்டிராவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். ஆகஸ்ட் 2023 நிலவரப்படி, ரவீந்திர ஜடேஜா 218 விக்கெட்டுகளுடன் இந்தியாவுக்காக அதிக ODI விக்கெட் எடுத்தவர்களில் 8வது இடத்தில் உள்ளார்.
22 ஜனவரி 2017 அன்று, கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் சாம் பில்லிங்ஸை அவுட் செய்தபோது, ஜடேஜா 150 ஒருநாள் சர்வதேச விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆனார். MS தோனிக்குப் பின், 2022 ஐபிஎல் சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் உரிமையின் கேப்டனாக அவர் அறிவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சீசனின் நடுப்பகுதியில் விலகினார். ஜடேஜா 17 ஏப்ரல் 2016 அன்று அரசியல்வாதி ரிவாபா சோலங்கியை மணந்தார். இவர்களுக்கு ஜூன் 2017ல் ஒரு மகள் பிறந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் இறுதி ஆட்டத்தில் சிக்ஸரையும் பவுண்டரியையும் அடித்து சிஎஸ்கேவுக்கு வெற்றியைத் தேடித் தந்த ஜடேஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இதே நாளில் 1993 இல் குஜராத்தின் அஹமதாபாத் நகரில் பிறந்து வளர்ந்தாலும் பாரம்பரியமிக்க சீக்கிய வம்சாவளியை சேர்ந்தவர் இந்திய அணியின் மரண மாஸான பந்து வீச்சாளர் பும்ரா. தன்னோடு விளையாடும் நண்பர்கள் அனைவரும் பேட் செய்ய விரும்பினால் ‘நான் உங்களுக்கு பவுலிங் போடுகிறேன்’ என பந்தை தன் கையில் வைத்திருப்பது தான் பும்ராவின் விளையாட்டு பாணி.
அவரது அம்மா தொந்தரவு இன்றி தூங்க வேண்டும் என்பதற்காக வீட்டில் விளையாடும்போது பந்தை சுவரும், தரையும் இணைகின்ற இடத்தில் பிட்ச் செய்து அதிக சத்தமில்லாமல் விளையாடியுள்ளார் பும்ரா. பின்னாளில் அதையே தனது ஆயுதமாக மாற்றி துல்லியமான யார்கர்களாக வீசி பேட்ஸ்மேன்களை இம்சிக்க பயன்படுத்தி கொண்டார்.
“யார்க்கர், பவுன்ஸ், ஸ்விங், ஸ்பீட் என ஒரு பாஸ்ட் பவுலர் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டிய வித்தைகள் அனைத்தையும் பும்ராவிடம் என்னால் பார்க்க முடிந்ததால் 2013 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவரை புக் செய்தோம்’ என்கிறார் பும்ராவை ஐபில் ஆட்டங்களில் விளையாட வைத்து அழகு பார்த்த ஜான் ரைட். தொடக்கத்தில் குஜராத் அணிக்காக விளையாடி இருந்தாலும். ஐபிஎல் தொடர் மூலம் இந்தியா கண்டெடுத்த மாணிக்கம் தான் பும்ரா.
சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான இந்தியாவிலிருந்து வேகப்புயலான பும்ரா கிடைத்திருப்பது அரிதான நிகழ்வு. நியூ பால், மிடில் ஓவர், டெத் ஓவர் என எங்கு தன்னை பந்து வீச சொன்னாலும் அதை செய்து விக்கெட்டுகளை வேட்டை ஆடுவார். சர்வதேச கிரிக்கெட்டிலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மாதிரியான மண்ணிலும் அபாரமாக பந்து வீசி அந்த நாடுகளை ஆட்டம் காண செய்தவர்.
கடந்த 1994 இல் மத்திய மும்பையின் ஆதர்ஷ் நகரில் பிறந்தவர் ஸ்ரேயாஸ் ஐயர். தனது தந்தை சந்தோஷ் ஐயரின் கனவை நிறைவேற்றுவதற்காக கிரிக்கெட் பேட்டை எடுத்தவர். கிரிக்கெட் அவரது ஜீனிலேயே கலந்தது. அவரது தந்தையும் கல்லூரி காலம் வரை கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். மும்பையின் ஜிம்கானா பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் அசத்தியதன் மூலம் 2014 இல் அண்டர் 19 இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
அங்கு டிராவிடிடம் கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றார். ஐபிஎல், ரஞ்சி, விஜய் ஹசாரே கோப்பை என உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியவருக்கு இந்திய சீனியர் அணியில் விளையாடும் வாய்ப்பு 2017 இல் கிடைத்தது. நீண்டகாலமாக இந்திய அணியின் நம்பர் 4 இடத்திற்கு வீரர்கள் சரியாக அமையாத நிலையில், 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் தான், நம்பர் 4 இடத்துக்கு சரியாக இருப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் நிலவிவருகிறது.