இன்று தேசிய விவசாயிகள் தினம்!... விவசாயிகளையும் விவசாயத்தையும் போற்றுவோம்!
இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மை மக்களின் பிரதான தொழில் விவசாயம். நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. நமது அன்றாட வாழ்க்கையில் விவசாயிகளின் பங்களிப்புகள் மகத்தானவை மற்றும் கணக்கிட முடியாதவை. இந்த நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் உணவளிக்கவும், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையவும் விவசாயிகள் தங்களது பங்களிப்பினை நாள்தோறும் விடுப்பு எடுக்காமல் செய்தாக வேண்டும். அந்தவகையில், விவசாயத்திற்காக பல சட்ட திட்டங்களை கொண்டு வந்து மறுமலர்ச்சி ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் சரண்சிங் நினைவாக அவரது பிறந்த தினமான டிச.23ல் தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவா் முன்னாள் பிரதமா் சரண் சிங். இவா் உத்தரப்பிரதேச அரசில் வேளாண்துறை மற்றும் வனத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்துள்ளார். இவர் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தபோது, நிலக் கையிருப்புச் சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய பங்காற்றினார். இச்சட்டம் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நிலக் கையிருப்பின் உச்ச அளவை குறைக்கும் முயற்சியாக அமைந்தது. இந்தியாவில் நெடுநாள் பிரச்சினையாக இருந்துவந்த உழுபவர்களுகே நிலம் என்பதை பல கூட்டங்களில் முன்வைத்தவர்.
1979-ம் ஆண்டு ஜூலை மாதம், நாட்டின் 5-வது பிரதமராக பதவியேற்றார், சரண் சிங். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் உரிமையாளர்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங். அவருடைய ஆட்சியின்போது தான் விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார்.
'ஜமீன்தாரி முறை ஒழிப்பு', 'கூட்டுறவு பண்ணை முறை', 'இந்தியாவில் வறுமை ஒழிப்பும் அதற்கான தீர்வும்', 'வேலை செய்பவர்களுக்கு நிலம்' உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அவர், 1987-ம் ஆண்டு மே 29-ம் தேதி உயிாிழந்தார். டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்துக்கு 'கிசான் காட்' (விவசாயிகளின் நுழைவாயில்) என பெயரிடப்பட்டுள்ளது. மக்களின் பசியை போக்க உணவை படைத்து வரும் விவசாயிகள் போற்றத்தக்கவர்கள். இருப்பினும் பல்வேறு காரணங்களால் இன்றைய சூழலில் விவசாய தொழில் சவாலான ஒன்றாக மாறி வருகிறது.
ஆனால், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் அல்லல்படுகின்றனர். உரிய விலை கிடைக்காதபட்சத்திலும் கடனை வாங்கியாவது பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தைச் செய்கின்றனர். ஆனால், அப்படி விவசாயம் செய்யும்காலத்தில் பருவமழை மாறி பெய்துவிடுவதால் நீரின்றி பயிர்கள் கருகுகின்றன அல்லது பருவம் தவறி பெய்யும் மழையால் பயிர்கள் நீரில் மூழ்குகின்றன. விளைவு, விவசாயிகள் கடனாளி ஆகிவிடுகின்றனர். அரசும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகையைத் தருவதில்லை. இதுசில நாட்கள் அப்படியே தொடரும் பட்சத்தில் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிடுகின்றன.
நிலம் வைத்து நீர் பாய்ச்சி விவசாயம் செய்தவர்கள் கூலி வேலைக்குச் செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சிலர் அந்த விவசாயத்தைத் தவிர, வேறு வேலை செய்யத்தெரியாத தவிப்பில் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். பட்டினி, விவசாயிகளின் வீட்டில் இலவச இணைப்பாக மாறிவிடுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 11 ஆயிரத்து 290 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 6 ஆயிரத்து 83 பேர் விவசாயத்தொழிலாளர்கள் என்பது இங்கே கவனத்திற்குரியது. அதுமட்டுமின்றி, சராசரியாக ஒரு விவசாயக் குடும்பத்தின் மாத வருமானம் 4ஆயிரத்து 63 ரூபாய் என்ற அளவில் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. என்னதான் விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம், தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம், வேளாண் உட்கட்டமைப்பு வசதி, பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா, நுண்ணீர் பாசன நிதி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் இருந்தாலும் அவை குறித்து முறையாக விவசாயிகளுக்கு விளம்பரமோ அல்லது விழிப்புணர்வோ செய்யப்படுவதில்லை.
அதைப் பற்றி அறிந்தாலும் இடையில் இருக்கும் சில அரசு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் போன்றவர்களால் முழுமையான பயனை விவசாயிகள் அனுபவிக்கமுடியாமல் போகிறது. இதை மாற்ற விவசாயத்துறையை சீரமைக்க விவசாயத்தின் மீது ஆர்வமுள்ள துடிப்பான இளைஞர்களை, விவசாயத்துறையில் பணியில் அமர்த்தவேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டத்தைப் பற்றி, பிரபல ஊடகங்களில் அவ்வப்போது தெளிவாக தமிழில் அனைவரும் புரியும் வகையில் விளம்பரம் செய்யவேண்டும். அப்போதுதான், அதைப் புரிந்து விவசாயிகள் அதனைப் பயன்படுத்தத் தொடங்குவர். அப்போதுதான் விவசாயிகளின் துயர் ஓரளவுக்குக் குறையும்.
நாமும் விவசாயிகள் தினத்தின்போது, விவசாயிகள் படும் கஷ்டத்தை அறிந்து, உழவர் சந்தைகளில் பேரம் பேசாமல் உணவுப்பொருட்களை வாங்குவோம். ஒருபோதும் உணவுப்பொருட்களை வீணாக்காமல் இருப்போம். விவசாயிகளையும் விவசாயத்தையும் போற்றுவோம்.