இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா பிறந்தநாள் இன்று!… ஹிட்மேனாக உருவாக்கியதே இவர்தான்!
HBD Rohit Sharma: இந்திய கிரிக்கெட் அணியின் ஹிட்மேன், கேப்டன் ரோஹித் சர்மா பிறந்த நாளை யொட்டி வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா இன்று தன்னுடைய 37வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில், மூன்று இரட்டை சதங்கள் குவித்த வீரருக்கு உலகம் முழுவதிலிருந்து வாழ்த்து மழை பொழிகிறது. இந்தநிலையில், கிரிக்கெட் பயணத்தில் அவர் கடந்து வந்த பாதையை நினைவுக்கூறுவோம்.
ஆரம்பகட்டத்தில் ரோஹித் ஆட்டம் அதிரடி பாணியில் இல்லாமல் நிதானமாகவே இருந்தது. ஏராளமான சொதப்பலுக்கு பிறகு ஒரு சிறந்த ஆட்டம் என்று இருந்த அவருக்கு பல்வேறு விமர்சனங்ளையும் மீறி வாய்ப்புக்கு மேல் வாய்ப்புகளை அளித்தார் கேப்டனாக இருந்த தோனி. இந்த தொடர் வாய்ப்பே அவரை இந்தியாவின் ஹிட்மேனாக உருவாக்கியது.
2007 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. சீனியர்களுக்கு மாற்றாக ஜூனயர்களை தேடும் வேலையில் பிசிசிஐ ஈடுபட்டது. அதற்கான முதல் படியாக டி20 போட்டிகள் அறிமுகமான அந்த காலகட்டத்தில் எம்எஸ் தோனியை கேப்டனாக தேர்வானார்.
முதல் உலகக் கோப்பை டி20 தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியின் ஒர் வீரராக இருந்தார் ரோஹித் ஷர்மா. தனக்கு கிடைத்தை வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அவர் தென்ஆப்பரிக்கா அணிக்கு எதிராக அரைசதமும் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
உலகக் கோப்பை தொடருக்கு முன்னரே அயர்லாந்து சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணியில் இடம்பிடித்தார் ரோஹித் ஷர்மா, ஆனாலும் டி20 உலகக் கோப்பை தொடரில்தான் தனது திறமையை நிருபித்தார். ஒரு நாள் அணியில் சீனியர் வீரர்களான கங்குலி, டிராவிட், லக்ஷ்மன் போன்றோர் ஓரங்கட்டபட்ட நிலையில் அந்த வாய்ப்பு ரோஹித்துக்கு சென்றது. ஆரம்ப காலத்தில் அதிரடி பேட்ஸ்மேனாக இல்லாமல் நிதானமாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபடும் பேட்ஸ்மேனாகவே இருந்து வந்தார்.
ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் முத்தரப்பு தொடரில் சச்சினுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து கவனத்தை ஈர்த்த ரோஹித் ஷர்மா, ஒரு போட்டியில் சிறப்பாக செயல்பட்டால், அடுத்த 4 முதல் 5 போட்டியில் சொதப்பல் பின்னர் நிலையான ஆட்டம் என இருந்த வந்தார். ரோஹித் ஷர்மாவின் கன்சிஸ்டன்ஸி பற்றி விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இதனால் 2011 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பும் பறிபோனது. பின்னர் 2012இல் மீண்டும் அழைக்கப்பட்டபோது மிகவும் மோசமான பார்மில் இருந்தார்.
ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் ரோஹித்து தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினார் கேப்டன் தோனி. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்து சொதப்பி வந்த அவரை ஓபனிங் பேட்ஸ்மேனாக, ஷிகர் தவானுடன் 2013இல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் புரொமோட் செய்தார். இது ரோஹித்துக்கு நன்கு ஒர்க் அவுட் ஆனது. இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் கைப்பற்றியது.
இதன் பிறகு ரோஹித்துக்கு தொட்டதெல்லாம் துலங்கியது. நிதான பேட்ஸ்மேனாக அடையாளப்படுத்திக்கொண்ட ரோஹித் அதிரடி பேட்ஸ்மேனாக உருவெடுத்தார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இதைத்தொடர்ந்து 2014ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நாலபுறமும் வானவேடிக்கை நிகழ்த்திய ரோஹித் இரட்டை சதம் அடித்து 264 ரன்களில் அவுட்டானார். இதுவே ஒரு நாள் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனிஸ் அதிகபட்ச ஸ்கோராக இன்று வரையிலும் உள்ளது. இந்த சம்பவம் மூலம் ரோஹித் ஷர்மா ஹிட்மேன் என்ற ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அணியில் தனக்கான நிலையான இடத்தை பிடித்த ரோஹித் மீண்டும் இலங்கை அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார்.
2015, 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தொடக்க பேட்ஸ்மேனாக சிறந்த பங்களிப்பை தந்தார். ஒரு நாள் போட்டிகளை போல் டி20 போட்டிகளிலும் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்து வந்த ரோஹித் ஷர்மா, அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்ட எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தார்.
ஐபிஎல் போட்டிகளிலும் தன்னை ஒரு ராஜாவாக நிலைநிறுத்திக்கொண்ட ரோஹித் ஷர்மா, மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக 2013 முதல் 2023 வரை 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவரது கேப்டன்சியில்தான் மும்பை அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. அத்துடன் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள ரோஹித் ஷர்மா, அதிக முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற கேப்டன் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிங்கம் போல் கர்ஜித்து வந்த ரோஹித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் நிலையான இடம் கிடைக்காமல் இருந்து வந்தார். ஆனால் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் தன்னை நிருபித்து கொண்ட வந்ததன் விளைவு தற்போது இந்திய டெஸ்ட், ஒரு நாள், டி20 அணியின் கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.